காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கினார் விஜயேந்திரர்

24th Jul 2021 04:26 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கினார்.

ஆண்டு தோறும் சந்நியாசிகள் தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கம். இவ்விரத நாள்களின் போது சந்நியாசிகள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி விரதத்தை அனுஷ்டித்து வருவார்கள். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் சதாப்தி மணிமண்டபத்தில் சனிக்கிழமை(ஜூலை 24)விரதம் தொடங்கி வரும் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று நிறைவு செய்யவுள்ளார்.

விரத தொடக்க நாளை முன்னிட்டு ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டபத்தில் விஜயேந்திரர் சந்திர மௌலீஸ்வர் பூஜையை நடத்தினார். பின்னர் வியாசபூஜையுடன் விரதத்தை தொடங்கினார். திருப்பதி, திருவானைக்காவல், ராமேசுவரம், காசி மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உட்பட தமிழகத்தில் முக்கிய கோயில்களிலிருந்து பலரும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருட்களுடன் ஓரிக்கை மணிமண்டபத்துக்கு வந்திருந்து பூஜைப்பொருட்களையும், கோயில் பிரசாதத்தையும் விஜயேந்திரரரிடம் வழங்கினார்கள்.

விரத பூஜை தொடக்க விழாவில் ஸ்ரீமகாலெட்சுமி மாத்ரு பூதேஸ்வரர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் நாராயணசாமி, ரமேஷ் சேதுராமன், வீழிநாதன், சமஸ்கிருத கல்லூரி பேராசிரியர் காமகோடி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் உட்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மூலவரான மகா பெரியவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்களின் நாதசுவர இன்னிசைக் கச்சேரியும், மாலையில் எல்.சுப்பிரமணியன் குழுவினரின் வயலின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர், ஸ்ரீமகாலெட்சுமி மாத்ரூ பூதேஸ்வரர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ந.சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
 

Tags : Vijayendra Saraswati Swamigal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT