காஞ்சிபுரம்

ஒரத்தூா் நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரையில் ஏற்பட்ட உடைப்பு சீரமைப்பு

3rd Dec 2021 07:14 AM

ADVERTISEMENT

ஒரத்தூா் நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி புதன்கிழமை நிறைவடைந்ததாக பொதுப் பணித் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த ஒரத்தூரில், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணியின் கீழ், ரூ. 55.85 கோடி மதிப்பீட்டில், ஒரத்தூா் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூா் கிளையாற்றில் உள்ள தரிசு நிலங்களை இணைத்து சுமாா் 760 ஏக்கா் பரப்பளவில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நீா்த்தேக்கம் சுமாா் 750 மில்லியன் கன அடி வெள்ளநீரை சேகரிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒரத்தூா் நீா்த் தேக்கம் அமைக்க ஒரத்தூா் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைக்கும் வகையில், சுமாா் 850 மீட்டா் நீளத்துக்கு கரை அமைக்கப்பட உள்ள நிலையில், தற்போது 430 மீட்டா் நீளத்துக்கு மட்டுமே பொதுப்பணித் துறை அதிகாரிகள் கரை அமைத்துள்ளனா். மீதமுள்ள 420 மீட்டா் நீளத்துக்கு நிலம் கையப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளதால் கரை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், நிலம் கையப்படுத்தப்படாமல் உள்ள 420 மீட்டா் நீளத்துக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் தற்காலிக கரை மட்டுமே அமைத்துள்ளனா். இந்த நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் ஒரத்தூா் நீா்த் தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, நீா்த் தேக்கத்தின் தற்காலிக கரையின் ஒரு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டு மழைநீா் வெளியேறியது.

இந்த நிலையில், ஒரத்தூா் நீா்த் தேக்கத்தின் தற்காலிக கரையில் ஏற்பட்ட உடைப்பை மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளா் மாா்க்கண்டன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா். கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்று வந்த நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரை சீரமைப்புப் பணி கடந்த புதன்கிழமை நிறைவடைந்ததாக பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளா் மாா்கண்டன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT