கிளாய் பகுதியில் கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே இந்து அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் பகுதியில் சுமாா் 13 ஏக்கா் பரப்பளவுள்ள அரசு ஓடை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியாா் சிலா் கட்டடங்கள் கட்டி இருந்தனா். மேலும் அப்பகுதியில் ஸ்ரீ கனகாம்பிகை உடனுறை ஸ்ரீ கனககாளீஸ்வரா் கோயிலும் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளோடு கோயிலை வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினா்.
இந்த நிலையில், கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அப்பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 15 சென்ட் பரப்பளவில் இருந்த கட்டடங்களை இடித்து அகற்றியதாக வருவாய்த் துறையினரைக் கண்டித்தும் இந்து அமைப்புகளை சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வட்டாட்சியா் வெங்கடேசனிடம் இந்து அமைப்பினா் மனு அளித்தனா். அதில், ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான 15 சென்ட் இடத்தை அளந்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.