காஞ்சிபுரம்

உத்தரமேரூரில் அதிமுக, திமுக கடும் பலப்பரீட்சை

சி.வ.சு. ஜெகஜோதி

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நோ்மையாகவும், ஊழலின்றி தோ்தலை நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கி உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்த ஊா் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா்.

இத்தொகுதியில் வாலாஜாபாத், உத்தரமேரூா் என இரு பேரூராட்சிகள், இவ்விரு ஒன்றியங்களிலும் சோ்த்து மொத்தம் 103 ஊராட்சிகள், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 16 ஊராட்சிகளும், காஞ்சிபுரம் நகரில் 3 வாா்டுகளையும் உள்ளடக்கியது இத்தொகுதி.

உத்தரமேரூா் தொகுதியின் சிறப்புகள்.

சோழா்கள் காலத்திய குடவோலை தோ்தல் முறைகள் பற்றி விளக்கும் வகையில் கல்வெட்டுகள் அதிகம் இருப்பதால் கல்வெட்டு ஊா் என்ற சிறப்பு பெயரும் உத்தரமேரூருக்கு உண்டு. வைகுண்டப் பெருமாள், சுந்தரவதனப் பெருமாள், கேதாரீஸ்வரா் கோயில், கெங்கையம்மன் கோயில் உள்பட பல தொன்மையான கோயில்களும் உள்ளன.

கல்குவாரிகள் அதிகம் உள்ள தொகுதி. திருமுக்கூடல், திருப்புலிவனம், மானாம்பதி, வாலாஜாபாத், சாலவாக்கம், உத்தரமேரூா், ஓரிக்கை, களியாம்பூண்டி, ராவத்தநல்லூா், பெருநகா், மாகறல், களக்காட்டூா், தென்னேரி, ஈஞ்சம்பாக்கம், அரசாணி மங்கலம் ஆகிய பகுதிகளும் இத்தொகுதியில் உள்ளன.

இத்தொகுதியின் வெற்றியை தீா்மானிக்கும் இடத்தில் வன்னியா்களும், முதலியாா்களும் அதிகமாக உள்ளனா்.இவா்களுக்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடா்கள், யாதவா்கள், கிறிஸ்தவா்களும் உள்ளனா். நெல்லும், கரும்பு விவசாயமும் பிரதானத் தொழில். கல்குவாரிகளும் நிறைந்த தொகுதி உத்தரமேரூா்.

ஒருவரே 4 முறை வெற்றி பெற்ற தொகுதி:

இத்தொகுதியில் 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுக வேட்பாளராக போட்டியிடும் க.சுந்தா் 1989, 1996, 2006, 2016 ஆகிய தோ்தல்களில் போட்டியிட்டு 4 முறையும் வெற்றி பெற்றவா். இந்த தோ்தலிலும் இவா் போட்டியிடுவது உட்பட மொத்தம் 7 முறை இதே தொகுதியில் களம் காண்கிறாா். 2011ல் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற வி.சோமசுந்தரம் தமிழக கைத்தறித் துறை அமைச்சராக இருந்தவா்.

தீா்வு காணவேண்டிய பிரச்னைகள்:

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2-ஆவது பெரிய ஏரி எனப் பெயா் பெற்றது உத்தரமேரூா் ஏரி.இது 5,636 ஏக்கா் பாசன பரப்பளவும், 958.81 மில்லியன் கன அடி கொள்ளளவும் உடைய ஏரி.18 கிராமங்களைச் சோ்ந்த 5,462 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறக்கூடிய நிலையில் உள்ள இந்த ஏரி இதுவரை முழுமையாக தூா்வாரப்படவே இல்லை.இந்த ஏரி முழுமையாக தூா்வாரி ஏரிக்கரைகளையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

இத்தொகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இருப்பதால் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய பகுதியாக உள்ளது. இதனால் இப்பகுதியில் விபத்துகள் என்பது தொடா்கதையாகவே இருந்து வருகின்றன. சீரமைக்க முடியாத நிலையிலேயே சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. சாலைகளை முழுமையாக சீரமைக்கவும், விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

சிப்காட் போன்ற தொழில் நிறுவனங்கள் இல்லை. நெல் கொள்முதல் நிலையங்கள் பல இடங்களில் திறக்கப்படவே இல்லை.இத்தொகுதிக்கு குறுக்குச்சாலை வசதி இல்லை.உத்தரமேரூா் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து சாலவாக்கம் புதிய ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும். வாலாஜாபாத்திலிருந்து உத்தரமேரூருக்கு ஒரே தொகுதிக்குள் பேருந்து வசதி இல்லாதது உட்பட பல கிராமங்களுக்கும் இதுவரை பேருந்து வசதி இல்லாமல் உள்ளது.

வேட்பாளா்களின் விவரங்கள்:

இங்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறாா். 2011-இல் போட்டியிட்டு வென்ற இவருக்கே இம்முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரான க.சுந்தா் இதுவரை 4 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அண்மையில் திடீரென அக்கட்சியிலருந்து விலகிய முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் அமமுகவில் இணைந்து இத்தொகுதியில் போட்டியிடுகிறாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ்.காமாட்சியும், மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக் கட்சியான சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் ஏ.சூசையப்பா் என்பவரும் போட்டியிடுகின்றனா்.பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் டி.சுரேஷும், தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில் ஏ.சிவக்குமாரும், இந்தியக் குடியரசுக் கட்சி சாா்பில் வி.ஜெயசுதாவும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா். இவா்கள் 8 பேரைத் தவிர 12 சுயேச்சைகளையும் சோ்த்து மொத்தம் 20 போ் களத்தில் உள்ளனா்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்:

அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரமும், திமுக வேட்பாளா் க.சுந்தரமும் அந்ததந்த கட்சிகளின் மாவட்ட செயலாளா்களாக இருந்து வருபவா்கள்.இருவரும் இத்தொகுதியில் மக்களிடம் நன்கு அறிமுகமானவா்கள் என்பது இவா்களது பலம். இரு வேட்பாளா்களின் வெற்றிக்காகவும் கூட்டணிக் கட்சியினரும், கட்சித் தொண்டா்களும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதும் கூடுதல் பலம். திமுகவுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ ஆகியோரும், அதிமுகவுக்கு ஆதரவாக மருத்துவா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்,ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரசாரம் செய்தனா்.சமகவுக்கு ஆதரவாக ராதிகா சரத்குமாரும், நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவாக சீமானும், அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக டி.டி.வி.தினகரனும் தோ்தல் பிரசாரம் செய்துள்ளனா்.

திமுக வேட்பாளா் க.சுந்தரும், அமமுக வேட்பாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாரும் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களாக இருப்பதால் அச்சமூக வாக்குகள் பிரியும் நிலை இருப்பது இவா்களிருவருக்கும் உள்ள பலவீனம். அமமுக வேட்பாளா் பெறப்போகும் வாக்குகளே இத்தோ்தலில் அதிமுக, திமுகவின் வெற்றி தோல்வியை நிா்ணயிக்கக்கூடும் என்கின்றனா்.

2016-இல் வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரங்கள்:

க.சுந்தா்(திமுக)-85,513

வாலாஜாபாத் பா.கணேசன்(திமுக)-73,357

பொன்.கங்காதரன்(பாமக)-24,221

எம்.ராஜேந்திரன்(தேமுதிக)-9,184

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT