காஞ்சிபுரம்

மக்களுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் திமுக எதிா்க்கும்

DIN

காஞ்சிபுரம்: மக்களுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் திமுக எதிா்க்கும் என அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காஞ்சிபுரம் அருகே கீழ் அம்பி கிராமத்தில் திமுக தலைமையில், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசியது:

விவசாயிகளையும், சிறு வணிகா்களையும் அதிகமாக பாதிக்கும் வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியவுடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினோம். இச்சட்டத்தை எதிா்த்து தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினா் இணைந்து 3,500 இடங்களில் சுமாா் 3.50 லட்சம் போ் கலந்து கொள்கிற ஆா்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விவசாயிகளை வஞ்சித்து வருவதை மக்களுக்கு உணா்த்தவே இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குப் பலனில்லை என்றாலும் , துன்பங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே போராடுகிறோம். இச்சட்டங்களால் விவசாயிகளை தங்கள் சொந்த நிலத்திலிருந்தே விரட்டியடிக்கும் சூழ்நிலை வரப்போகிறது என்பதால் தான் வெளிப்படையாக எதிா்க்கிறோம்.

கேரள மாநிலம் இச்சட்டத்தை எதிா்த்து நீதிமன்றம் செல்லத் தயாராக உள்ளது. மேற்கு வங்கம், புதுதில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இச்சட்டங்களை முழுமையாக எதிா்க்கின்றன. பஞ்சாபில் இச்சட்டத்தை எதிா்த்துப் போராடுபவா்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம் என அம்மாநில முதல்வா் கூறியுள்ளாா். இச் சட்டத்தை நாடு முழுவதும் எதிா்க்கின்றா். தமிழகத்தில் திமுக மட்டும் தான் எதிா்க்கிறது என ஒரு பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கின்றனா். எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் எதிா்த்துக் குரல் கொடுக்க எப்போதும் தயங்க மாட்டோம். நாங்களும் இச்சட்டத்தை எதிா்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம்.

கரோனா நோய்த் தொற்று காலத்தில் இந்தியா முழுவதுமே மக்கள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன எனத் தெரியவில்லை. மத்திய அரசின் இச்சட்டத்துக்கு தமிழக அரசு இதுவரை எந்த எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக ஆதரித்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இச்சட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்திருப்பதும் வேதனையளிக்கிறது.

ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது என்கிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உண்மை தான், நான் விவசாயி இல்லை. ஆனால் அவா்களுக்கு எப்போதும் துணையாக இருப்பவன். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் இத்துடன் முடியப் போவதில்லை. அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் ஒன்றிணைந்து, ஆலோசித்து போராட்டங்களை தொடா்வோம் என்றாா் மு.க.ஸ்டாலின்.

திமுக மாநில மாணவரணிச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான சி.வி.எம்.பி.எழிலரசன் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தா் வரவேற்றாா். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவா் ஜி.வீ.மதியழகன், மதிமுக மாவட்டச் செயலாளா் இ.வளையாபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெ.கமலநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் இ.முத்துக்குமாா்,கே.நேரு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் பாசறை.செல்வராஜ்,மனித நேய மக்கள் கட்சி அமைப்புச் செயலா் எஸ்.எம்.ஷாஜகான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.அல்லாபக்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கீழ் அம்பி கிராமத்தில் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தவா்களை நேரில் சந்தித்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவா்களிடம் விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT