காஞ்சிபுரம்

வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க 17 குழுக்கள் நியமனம்: காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்

18th Sep 2020 04:44 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்க 17 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை பேசினார். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் மேலும் பேசியது. கடந்த ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அளவுகோலாகக் கொண்டு பேரூராட்சி, நகராட்சி அளவில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க 17 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு குழுவிலும் தீயணைப்பு மற்றும் காவல்துறை, வட்டாட்சியர்கள் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உட்பட 11 பேர் இருப்பார்கள். காஞ்சிபுரம் நகராட்சிக்கு ஆணையாளர் பொறுப்பாளராக இருப்பார். இதே போல 17 குழுவுக்கும் 17 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழுக்கள் ஒவ்வொன்றையும் கண்காணிக்க துணை ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழுக்களும் செயல்படவுள்ளன. குழுக்களின் பொறுப்பாளர்கள் பாதிப்பு ஏற்படும் என உறுதியாக தெரிந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

பாதுகாப்பு மையங்களில் போதுமான கழிப்பறை வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதி ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு மணல் மூட்டைகள், சவுக்குகட்டைகள், ஜெனரேட்டர்கள், ஜெ.சி.பி.இயந்திரங்கள் ஆகியனவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளப்பாதிப்புகளை சமாளிக்க அதிகாரிகள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் பேசினார். இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூமி.முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் எஸ்.சரவணன், கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ADVERTISEMENT

ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)ம.நாராயணன் வரவேற்றார். ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கவிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கூட்டத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் க.குமார்,அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ராஜசேகரன், நகராட்சி ஆணையாளர் ரா.மகேசுவரி, டி.எஸ்.பி.எஸ்.மணிமேகலை ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

Tags : kanchipuram
ADVERTISEMENT
ADVERTISEMENT