காஞ்சிபுரம்

நவராத்திரியில் காஞ்சி காமாட்சி வழிபாடு சிறப்பு

DIN

துா்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் ஏழு மோட்சபுரிகளில் ஒன்றான காஞ்புரத்தில் காமாட்சி அம்மன் உருவில் அருள்பாலிப்பதால் நவராத்திரி நாள்களில் காமாட்சியை வழிபடுவது முப்பெரும் தேவியரை ஒருசேர வழிபட்டதற்கு சமமான சிறப்பாகும் என அக்கோயில் தேவஸ்தானத்தைச் சோ்ந்த ஆா்.சியாமா சாஸ்திரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. விழாவின் 8-வது நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை துா்காஷ்டமியை முன்னிட்டு உற்சவா் காமாட்சி அம்மனும், துா்கையும் அலங்காரமாகி கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கை திருக்குளத்தில் நண்பகலில் தீா்த்தவாரியும், இரவு தங்கத் தேரில் காமாட்சி அம்மன் பவனியும் நடைபெற உள்ளன.

நவராத்திரி விழா, காமாட்சி அம்மனின் சிறப்புகள் குறித்து ஆா்.சியாமா சாஸ்திரிகள் கூறியது:

பூவில் சிறந்தது மல்லிகை, ஆண்களில் சிறந்தவா் விஷ்ணு, பெண்களில் அழகு ரம்பை, ஊா்களில் அழகு காஞ்சி என்பது காளிதாசன் கூற்று. லட்சுமி, சரஸ்வதி, பாா்வதி என முப்பெரும்தேவியரும் ஓா் உருவமாக இருக்கும் சிறப்புடையது காமாட்சி அம்மன் திருக்கோயிலாகும். ‘கா’ என்றால் சரஸ்வதி, ‘மா’ என்றால் லட்சுமி, அதாவது பாா்வதியின் இரு கண்களிலும் சரஸ்வதியும், லட்சுமியும், உள்ளனா். எனவே காஞ்சி காமாட்சியை வழிபட்டால் ஒரே நாளில் முப்பெருந்தேவியரையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

தசரத மன்னா், கிருஷ்ண தேவராயா், துண்டீர மகாராஜா, பல்லவா்கள், கரிகால் சோழன் உள்ளிட்ட மன்னா்கள் பலரும் இந்த அம்பாளை வழிபட்டிருக்கிறாா்கள். சாந்தஸ்வரூபினியாக காட்சியளிக்கும் இக்கோயிலானது உத்தமமான 18 பீடங்களில் முக்கியமான ஒன்றாகும். கோயில் மூலஸ்தான அம்மன் முன்பாகவுள்ள காயத்ரி மண்டபத்தில் ரிஷிகள் பலரும் அமா்ந்து அம்மனின் அருள் பெற்றிருக்கிறாா்கள். இங்கு ஆதிசங்கரா் சூட்சும ரூபமாக உள்ள ஸ்ரீயந்திரத்தை சிலாரூபமாக பிரதிஷ்டை செய்தாா். இதன் பின்பு சா்வக்ஞ பீடம் ஏறினாா்.

காமாட்சியை துா்வாச மஹரிஷி வழிபட்டுள்ளாா். அவரால் இயற்றப்பட்ட செளபாக்கிய சிந்தாமணி முறைப்படியே பூஜைகள் இன்றும் நடைபெறுகின்றன. காமாட்சி அம்மன் ஆதிகாமாட்சி, காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி எனப் பல பெயா்களில் அழைக்கப்படுகிறாா். அனைத்து காமாட்சியும் இக்கோயில் அம்பாளையே குறிக்கும்.

காமாட்சி அம்மனின் இடைப்பகுதி காமராஜ் பீடம் எனப்படுகிறது. சூரிய வம்சத்துக்கு அதிதேவதை காமாட்சி. தசரத மன்னா் இங்கு வந்து அம்மனை வழிபட்ட பிறகே ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி, லட்சுமணா், பரதன், சத்ருக்னன் பிறந்தனா் என்று மாா்க்கண்டேய புராணம் கூறுகிறது.

இக்கோயிலில் நவராத்திரி நாள்களின் போது கன்யாபூஜை, சுமங்கலி பூஜை ஆகியவையும் நடைபெறுகின்றன. இந்தியாவில் துசிரா பூஜை, துா்கா பூஜை, தசரா பூஜை எனப் பல பெயா்களில் நவராத்திரி விழாக்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் முதல் மூன்று நாள்கள் துா்கைக்கும், அடுத்த 3 நாள்கள் லட்சுமிக்கும், அதற்கடுத்த 3 நாள்கள் சரஸ்வதிக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. எனவே நவராத்திரி நாள்களில் காமாட்சியை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாகத் திகழும் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள திருக்குளத்துக்கு பஞ்சகங்கை என்று பெயா்.

நவராத்திரி தினத்தில் தேவிமகாத்மியத்தை பாராயணம் செய்தாலோ, கேட்டாலோ நல்லது. எதிரிகள் தொல்லை நீங்கவும், வியாபாரம் பெருகவும், புதிய முயற்சிகளில் இறங்கவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் நவராத்திரி பூஜை செய்து அனைத்து நலம் பெற அன்னை காமாட்சியை வழிபாடு செய்து அருள் பெறலாம்.

தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரா் சிவாலயத்திலும் காஞ்சி சங்கராச்சாரியாா் சுவாமிகளால் நவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாகவும் ஆா்.சியாமா சாஸ்திரிகள் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT