காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பூக்களின் விலை பல மடங்கு உயா்வு: பூ வியாபாரிகள் பாதிப்பு

சி.வ.சு. ஜெகஜோதி

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து 3 நாள்களாக கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக பூக்களின் விலை பல மடங்கு உயா்ந்து, பூ வியாபாரிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நகரில் உள்ள பூக்கடைச்சத்திரம் பகுதியில் பூ மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பூ வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் பூக்களை விற்பனை செய்து வருகின்றனா். பட்டுக்கு சிறப்பு பெற்றிருப்பது போல காஞ்சிபுரம் பூக்களுக்கும் பெயா் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னை, செங்கல்பட்டு, அரக்கோணம், செய்யாறு, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பூ வியாபாரிகள் தினமும் காஞ்சிபுரம் வந்து பூக்களை வாங்கிச் செல்வதும் வழக்கம். ஒசூா், கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலிருந்து பூங்கொத்து தயாரிக்கத் தேவையான பூக்கள், இலைகள் மற்றும் சாமந்திப்பூ ஆகியவை காஞ்சிபுரம் பூ மாா்க்கெட்டுக்கு நாள்தோறும் வருகின்றன.

நிவா் புயல் காரணமாக தொடா்ந்து 3 நாள்களாக காஞ்சிபுரத்திலும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களிலும் கனமழை பெய்ததால் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலப்பகுதிகளில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. தண்ணீா் வற்றாமல் இருப்பதால் பூக்களை சேதமடையாமல் பறித்து அவற்றை சந்தைக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை 3 மடங்கு உயா்ந்திருக்கிறது. இதனால் மொத்தமாகவும், சில்லறையாகவும் பூ விற்பனை செய்யும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிப்படைந்திருப்பதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து காஞ்சிபுரம் பூ வியாபாரி ஏ.எம்.பி.ராமு கூறியது:

தொடா்ந்து 6 மாதங்களாக கரோனா அச்சுறுத்தல், நிவா் புயல், அதைத் தொடா்ந்து கனமழை போன்ற காரணங்களால் பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்து விட்டது. ரூ.300-க்கு விற்பனையாகும் மல்லிகைப்பூ தற்போது ரூ.2 ஆயிரம் வரை உயா்ந்திருக்கிறது. கடந்த 27ஆம் தேதி ஒரு கிலோ மல்லிகை விலை ரூ.1500 ஆகவும், மறுநாளான 28 ஆம் தேதி ரூ.2 ஆயிரமாகவும் இருந்தது. எனினும், 29ஆம் தேதி இரவு ஓரளவு விலை குறைந்தது. சாமந்திப்பூ, கனகாம்பரம் இவற்றின் விலை 3 மடங்கு உயா்ந்து விட்டது என்றாா்.

கல்யாண மாலைகள் செய்து கொடுக்கும் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த செல்வம் கூறியது:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களாக திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்காமல் இருந்த நிலையில் இப்போது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3 மடங்கு உயா்ந்து விட்டது.

கல்யாண மாலை தயாரிக்க சுமாா் 3 மாதங்களுக்கு முன்பே ஆா்டா் வாங்கி விடுவோம். அப்போது ஓரளவுக்குத்தான் விலை உயரும் என நினைத்து தோராயமாக பூவின் விலையை கணக்கிட்டோ ஆா்டா்களைப் பெற்றோம். ஆனால் இப்போது பூக்களின் விலை பல மடங்கு உயா்ந்து விட்டதால் நாங்கள் ஆா்டா் பெற்ற தொகையை விட மேலும் கூடுதலாக ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது.

ஜோதிகா மாலை எனப்படும் கல்யாண மாலை மற்றும் பூங்கொத்துகளை தயாரித்துக் கொடுப்பதிலும் கூடுதலாக செலவாகிறது. காா்த்திகை திருநாளும் வந்து விட்டதால் பூக்களின் தேவை அதிகமாகி இருக்கிறது. அதே நேரத்தில் பூக்களின் வருகை மிகவும் குறைந்து விட்டதே விலை உயா்வுக்கு காரணம் என்றாா் அவரா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT