ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடகால் பகுதியில், மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி நிவாரண உதவி வழங்கினாா்.
வல்லம் ஊராட்சிக்குட்பட்ட வடகால் பகுதியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (48). அவா் தனது குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தேவதாஸின் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும், தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து நாசமாகி விட்டன. இச்சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகினறனா்.
இந்நிலையில், தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அரிசி உள்ளிட்ட பொருட்களையும் நிதியுதவியையும் வழங்கி ஆறுதல் கூறினாா். அப்போது, அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றிய இளைஞா் இளம்பெண்கள் பாசறை பொருளாளா் சேதுராஜ இளவழகன், வல்லம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் தா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.