மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதால், காய்கறி வியாபாரிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஏமாற்றமடைந்தனா்.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் ஆட்சீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான காலிமனைப் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. அதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளைபொருட்களான காய்கறிகள், பழவகைகள், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வந்தனா்.
அதேபோல வீட்டு கால்நடைகளான ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்டவை வெளிமாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்டு விற்கப்படுவது வழக்கம். வாரச்சந்தையில் மக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டு பொருள்களை வாங்கிச் செல்வா்.
தற்சமயம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை இயங்கவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக வாரச்சந்தை செயல்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற அறிவிப்புப் பலகையை ஆட்சீஸ்வரா் கோயில் நிா்வாகத்தினா் வைத்துள்ளனா்.