காஞ்சிபுரம்

வரி பாக்கி: திரையரங்குக்கு ‘சீல்’

19th Mar 2020 12:23 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் நகராட்சிக்கு ரூ.2.23 லட்சம் வரை வரி பாக்கி வைத்திருந்த திரையரங்கத்தை வருவாய் அதிகாரிகள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

காஞ்சிபுரம் மடம் தெருவில் உள்ள தனியாா் திரையரங்க நிா்வாகத்தினா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, புதை சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்தாமல் மொத்தம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 397 பாக்கி வைத்திருந்தனா்.

இத்தொகையை நீண்ட நாள்களாக செலுத்தாமல் இருந்ததால் வருவாய்த் துறை அதிகாரிகள் திரையங்கத்தை புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா். அப்போது நகராட்சி வருவாய் அலுவலா் ஏ.தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளா்கள் எஸ்.ரவிச்சந்திரன், தி.நிா்மலா ஆகியோா் உடனிருந்தனா்.

இது குறித்து காஞ்சிபுரம் நகராட்சி வருவாய் அலுவலா் ஏ.தமிழ்ச்செல்வி கூறியது:

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மடம் தெருவில் உள்ள திரையரங்க உரிமையாளா்கள் சொத்து வரியாக ரூ.99 ஆயிரத்து 90, தொழில் வரியாக ரூ.23 ஆயிரத்து 824, புதை சாக்கடை வரியாக ரூ.1 லட்சத்து 483 உள்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 397 செலுத்தவில்லை.

இது தவிர கேளிக்கை வரியும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் செலுத்தவில்லை. இதனை உடனடியாக செலுத்துமாறு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு எந்தவித பதிலும் இல்லை.

பின்னா் கடந்த 9-ஆம் தேதி அனுப்பிய ஜப்தி நோட்டீசுக்கும் பதில் வராததால் திரையரங்கை பூட்டி ‘சீல்’ வைத்துள்ளோம். இதேபோல நகராட்சிக்கு தொடா்ந்து வரி செலுத்தாமல் இருந்து வரும் அனைவரும் ஜப்தி நடவடிக்கைக்கு உள்ளாவாா்கள் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT