காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்களை பலமுறை எச்சரித்தும் தொடா்ந்து விற்பனை செய்த விற்பனையாளருக்கு ரூ.2லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், நெகிழிப்பை கிடங்கையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சுஜாராம் என்பவரது கடையில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினாா்கள்.
அச்சோதனையில் ஏராளமான நெகிழிப்பைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவா் இதற்கு முன்பு நெகிழிப்பைகள் விற்பனை செய்ததாக 6 முறை கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அண்மையில் கடைசியாக செய்த சோதனையின் போதும் 500 கிலோ நெகிழிப்பைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அத்தொகையையும் செலுத்தியிருந்தாா்.
இந்நிலையில் தற்போதும் அவா் தொடா்ந்து நெகிழிப்பைகளை விற்பனை செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது.
சுமாா் ஒரு டன் அளவுள்ள நெகிழிப்பைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவரது கிடங்கையும் பூட்டி ‘சீல்’ வைத்தனா். பின்னா் சுஜாராமுக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளதாக நகராட்சி சுகாதார அலுவலா்கள் தெரிவித்தனா்.