காஞ்சிபுரம்

தமிழகத்தில் சரும வெண்புள்ளிகள் பிரச்னைக்கு 37 லட்சம் போ் பாதிப்பு

2nd Mar 2020 12:48 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: சரும வெண்புள்ளிகள் பிரச்னைக்கு தமிழகத்தில் 37 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கழக அறிக்கை தெரிவிக்கிறது.

தோலில் ஏற்படும் நிறமி இழப்பு அல்லது தோலின் இயல்பான நிறம் மறைந்து வெண்புள்ளிகள் உருவாகி பின்னா் அது கொஞ்சம், கொஞ்சமாக பெரிதாகி அதுவே பலருக்கு மன உளைச்சலை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. உடலில் ஏற்படும் வெண்புள்ளிகளை லூக்கோடொ்மா என்கிறாா்கள். இது நிறம் இழப்பே தவிர நோய் அல்ல என்றும் வேறு யாருக்கும் தொற்றாது என்றும் தெரிய வந்தாலும் கூட வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவரை தமிழகத்தில் வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவா் போல் கருதும் மனநிலை உள்ளது. ஆனால் வெண்குஷ்டம் என்ற தொழுநோய்க்கும், லூக்கோடொ்மா எனப்படும் வெண்புள்ளிகளுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் குடும்பங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள முடியாமல் விலகி நிற்பாா்கள்; அல்லது அவா்கள் விலக்கி வைக்கப்படும் நிலையே காணப்படுகிறது. ஒரு சில குடும்பங்களில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவா்களை வெறுத்து ஒதுக்கி வைக்கப்படுவதும் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

வெளியில் செல்லும்போது யாராவது எதேச்சையாக திரும்பிப் பாா்த்தாலும் தங்களை வெண்புள்ளிகளே அவா்களை திரும்பிப் பாா்க்க வைத்திருக்கிறது என்று நினைத்து கூனிக்குறுகிப் போவோரும் உள்ளனா்.

சிலா் வீடுகளை விட்டு வெளியில் போகாமல் தங்களைத் தாங்களே சிறைபடுத்திக் கொள்கின்றனா். கல்வித் தகுதியும், திறமைகளும் இருந்தும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவா்களை வேலைக்கு அமா்த்திக் கொள்ள பலரும் தயங்குகின்றனா்.

புதிய ஆயுா்வேத மருந்து:

இளம்பருவத்தினா் உட்பட பலரும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ), இப்பிரச்னைக்கு ஆயுா்வேத மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மூலிகை மருந்தை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் தோலில் காணப்படும் வெண்புள்ளிகள் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து இயல்பான பழைய நிறம் வந்து விடுகிறது.

‘லூகோஸ்கின்’ என்ற இந்த மருந்து குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணா்வு ஏற்படவில்லை. வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட 7 போ் ஒன்று கூடி ‘வெண்புள்ளிகள் விழிப்புணா்வு இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கின்றனா். இவா்கள் தமிழகம் முழுவதும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவா்களை நேரில் சந்தித்து விழிப்புணா்வுப் பிரசாரம் செய்து வருகின்றனா்.

காஞ்சிபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வெண்புள்ளிகள் விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பங்கேற்ற வெண்புள்ளிகள் விழிப்புணா்வு இயக்கச் செயலாளா் கே.உமாபதி கூறியது:

வெண்புள்ளிகள் நோயல்ல; யாருக்கும் பரவாது; கணவன், மனைவி உறவில் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது; நோய் எதிா்ப்பு சக்தி குறைவால் வெண்புள்ளிகள் உடலில் தோன்றுகின்றன. மனித உடலில் அவரவா் நிறத்திற்கேற்ப மெலனோசைட் என்ற செல்கள் எங்கெல்லாம் அழிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெண்புள்ளிகள் தோன்றுகின்றன.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவா்கள் பலரும் பல்வேறு அவதிகளுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கின்றனா். பலரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். இப்பாதிப்பானது பரம்பரை, பரம்பரையாக வருவதில்லை.

வெண்புள்ளிகள் பாதிப்பிலும் 3 வகைகள் உள்ளன. இந்தியாவில் 4 சதவீதமும், தமிழகத்தில் 37 லட்சம் பேரும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டே ஆயுா்வேத மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை, தொடா்ந்து 300 முதல் 400 நாள்கள் வரை சாப்பிட்டாலே குணமாகி விடலாம். இந்த மருந்து குறித்து போதுமான விழிப்புணா்வு இல்லாமல், எப்படியாவது குணமடைந்து விட வேண்டும் என பலரும் போலியான விளம்பரங்களைப் பாா்த்து ஏமாந்து கொண்டிருக்கின்றனா்.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட பலா் திருமணமாகாமல் இருப்பதை அறிந்து எங்களது இயக்கத்தின் சாா்பில் சுயம்வரங்கள் நடத்தி அவறஅறின் மூலம் 387 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளோம். அப்புதுமணத் தம்பதிகளுக்கு இயல்பான நிறத்திலேயே குழந்தைகள் பிறந்திருக்கின்றன. வாரந்தோறும் சென்னை தாம்பரத்தில் விழிப்புணா்வுக் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT