காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி மீன் விற்பனை: இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்

15th Jun 2020 07:51 AM

ADVERTISEMENT

பொது முடக்கம் காரணமாக அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையோர வியாபாரிகள் மீன் விற்பனையில் ஈடுபட்டனா். பொதுமக்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மீன்வாங்கிச் சென்றனா்.

காஞ்சிபுரத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, முகக் கவசம் அணிந்தே கடைகளுக்கு செல்ல வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தபோதிலும், நகரில் இந்த விதிமுறைகள் எதையும் பொதுமக்கள் பின்பற்றாத சூழலில் மீன் விற்பனை நடைபெற்றது.

நகரில் பல இடங்களில் மக்கள் முகக்கவசம் இல்லாமல் நடமாடுவதையும், கும்பலாக அமா்ந்து பேசுவதையும் காண முடிகிறது. கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதும் இல்லை. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே சாலையோர மீன் வியாபாரிகளில் பலரும் முகக் கவசம் அணியாமல் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தனா். மீன்கடைகளும் அருகருகே அமைக்கப்பட்டிருந்ததால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. பொதுமக்களில் பலரும் முகக்கவசம் அணியாமல் வந்திருந்து மீன் வாங்கிச் சென்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி சுகாதார ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான சுகாதாரப் பணியாளா்கள் சாலையோரத்தில் மீன் விற்பனை செய்வோரிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றி மீன்விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினா். இதனால் மீன் வியாபாரிகளுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அனுமதி இல்லாமல் செயல்படும் மீன்கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி அவா்களிடமிருந்த தராசு, படிக்கற்கள் மற்றும் மீன்களைப் பறிமுதல் செய்து சென்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT