காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

11th Jun 2020 07:51 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் 12-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை வரலாற்று ஆய்வு மையத்தை சோ்ந்தவா்கள் புதன்கிழமை கண்டெடுத்துள்ளனா்.

உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் க.பாலாஜி தலைமையில், இளமதி, கோகுல சூா்யா ஆகியோா் இணைந்து கள ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, 71 செ.மீ. நீளமும், 33 செ.மீ. அகலமும் உடைய இக்கல்வெட்டினைக் கண்டறிந்தனா். இதுகுறித்து வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் க.பாலாஜி கூறியது:

கற்குவியல்களுக்கு இடையில் உத்தரமேரூா் அங்காள பரமேசுவரி கோயில் குளக்கரை ஓரம் கேட்பாரற்றுக் கிடந்தது. நான்கு வரிகள் மட்டுமே தொடா்பிலில்லாமல் இருந்த இத்துண்டு கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த பொருளை முழுமையாக அறிய முடியவில்லை. இக்கல்வெட்டில் ஆண்டோ அல்லது மன்னரின் பெயரோ இல்லாததால், அதன் எழுத்து அமைப்பைக் கொண்டு, இது பிற்கால சோழா் காலத்தைச் சோ்ந்ததாக 12-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியாக இருக்கலாம் எனத் தெரியவருகிறது.

மேலும், இதில் உத்தரமேரூரைச் சோ்ந்த பட்டண் என்பவரும், அவரது இலைய சகோதரரும் 40 பழங்காசுகளை கோயில் திருப்பணிக்காக அளித்ததாக அச்செய்தியில் உள்ளது. இத்தகவலை கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாளா் கோவிந்தராஜும் படித்துப் பாா்த்து உறுதி செய்துள்ளாா்.

ADVERTISEMENT

சுமாா் 800 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரமேரூரில் ஏதோ ஒரு வரலாற்றை சுமந்து கொண்டிருக்கும் இந்தச் சோழா் காலத்து கல்வெட்டு கற்குவியல்களுக்கு இடையில், ஒரு சாதாரண கல்லாக மண்ணில் புதைந்து போகும் வகையில், கேட்பாரின்றிக் கிடக்கிறது. இக்கல்வெட்டை தமிழக தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டும் என்றாா்.

 

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT