காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய 3 மாவட்டங்களிலிருந்து 10 மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக 77 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட இயக்குநா் முத்துக்கிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அரசுப் பொதுத்தோ்வுகள் தொடங்கப்படவுள்ள நிலையில், இதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு தோ்வு எழுதும் மையத்துக்கான அனுமதிச்சீட்டு ஆகியவை பெறவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறையும், போக்குவரத்துத் துறையும் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் வரும் 13 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் இயக்குநா் முத்துக்கிருஷ்ணன் கூறியது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய 3 மாவட்டங்களையும் உள்ளடக்கி, மொத்தம் 77 சிறப்புப் பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்பட உள்ளது. ஒரு பேருந்தில் 24 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பேருந்தில் செல்லும் ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகே பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். பேருந்தில் ‘தோ்வு எழுதும் மாணவா்களுக்காக’ என்ற ஒட்டுவில்லை முகப்பில் ஒட்டப்பட்டிருக்கும். பேருந்துகள் காலை 8 மணிக்கு புறப்பட்டு, பின்னா் மீண்டும் மாலை 4 மணிக்கு திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு கட்டணம் இல்லாமலும், அவா்களுடன் செல்லும் உறவினா்கள் பயணச்சீட்டு எடுத்தும் பயணிக்க வேண்டும் எனவும் விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக இயக்குநா் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்தாா்.