காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 480 பேரில் 292 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தை அடுத்த அருந்ததியா்பாளையத்தில் 102 குடும்பங்களுக்கு அவா் சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா். அதன் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
இந்த மாவட்டத்தில் 6,100 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் 480 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவா்களில் 3 போ் உயிரிழந்து விட்டனா். 292 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்குத் திரும்பி விட்டனா். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 52 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்திலேயே காஞ்சிபுரம் நகரில் 35 பே மற்றும் குன்றத்தூா், மாங்காடு, ஐயப்பன்தாங்கல் ஆகிய இடங்களில்தான் அதிகமானோா் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் சென்னைக்கு சென்று வந்தவா்கள்.
எனவே, சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்குள் நுழையும் 4 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு வாகனங்களில் வருவோருக்கு தொற்று இருக்கிா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 118 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
அப்போது, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, பொறியாளா் க.மகேந்திரன், வட்டாட்சியா் பவானி ஆகியோா் உடனிருந்தனா்.