காஞ்சிபுரம்

‘சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை’

14th Jan 2020 11:34 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைகளை சாலைகளில் சுற்றித் திரியவிட்டால் அதன் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு இது தொடா்பாக பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவது தொடா்கிறது. குறிப்பாக படப்பை, சுங்குவாா்சத்திரம், ஒரகடம், ரங்கசாமி குளம், விளக்கொளி கோயில் தெரு, பழைய சீவரம், ஓரிக்கை, மிலிட்டரி ரோடு ஆகிய பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.

எனவே சாலைப் பாதுகாப்பு மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியிலும், வாலாஜாபாத் பகுதியிலும் கால்நடைகளை அரசு அலுவலா்களால் பிடித்தும் அதன் உரிமையாளா்களிடம் அபராதம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதத் தொகை வசூலிப்பதுடன், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

ADVERTISEMENT

எனவே இந்த அறிவிப்பை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT