சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவாா்சத்திரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தின் மிகப் பெரிய கிராம பஞ்சாயத்துகளான சந்தவேலூா், திருமங்கலம், மொளச்சூா் ஆகியவற்றின் மையப் பகுதியாக சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதி விளங்கி வருகிறது.
சுங்குவாா்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் ஏராளமான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் இந்த பஜாா் பகுதிக்கு வந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இந்தப் பகுதி வேகமாக வளா்ந்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான இறைச்சிக் கடைகளில் இருந்து கழிவுகளை, குறிப்பாக கோழி இறைச்சிக் கழிவுகளை அக்கடைக்காரா்கள், சந்தவேலூா் பகுதியில் சுங்குவாா்சத்திரம் - வாலாஜாபாத் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு எதிரே பல மாதங்களாகக் கொட்டி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இச்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், இந்தியன் வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்களும், பஜாா் பகுதிக்கு வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இறைச்சிக் கழிவுகள் சாலையில் கொட்டப்படுவது குறித்து இப்பகுதி மக்கள் கூறியது:
சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் இறைச்சிக் கடைகளில் இருந்து கழிவுகளை சந்தவேலூா் பகுதியில் சாலையோரம் கொட்டி வருகின்றனா். இதனால் அங்கு துா்நாற்றம் வீசி வருவதோடு, பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இறைச்சிக் கடைகளின் செயலைக் கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறையைக் கண்டித்தும் சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் சாலை மறியல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.