காஞ்சிபுரம்

தையற்பயிற்சி நிறைவு விழா

1st Jan 2020 12:42 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்:சுயதொழில் செய்யும் பெண்களுக்கு பிணையம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே.சண்முகராஜ் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி அவா் மேலும் பேசியது..சுயதொழில் பயிற்சிகளை முடித்தவா்கள் மென்மேலும் அத்தொழில் சாா்ந்த திறன்களை வளா்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.ஒரு தொழிலை கற்றுக் கொண்டால் மட்டுமே போதாது.அத்தொழிலை தொடா்ந்து எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் சந்தித்து அதில் வெற்றி பெற்று விடாமுயற்சியுடன் தொழிலை நடத்த வேண்டும்.வெற்றி பெற்றவா்கள் அனைவரும் கஷ்டப்பட்டவா்களாகத் தான் இருப்பாா்கள்.

ஒரே நாளில் யாரும் பணக்காரா்களாகி விட முடியாது. பிரச்சினைகளை கண்டு துவண்டு விடாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.சுயதொழில் கற்றுக்கொண்டவா்கள் கூட்டாக இணைந்தும் தொழில் செய்யலாம்.கூட்டாக இணைந்து தொழில் செய்பவா்களுக்கும் வங்கிகள் கடன் கொடுக்க தயாராக இருக்கின்றன.இக்குழுக்கடன்களுக்கு மானியமும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பிணையம் இல்லாமல் 10லட்சம் வரை கடன் கொடுக்கும் திட்டம் பாரதப்பிரதமரால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இக்கடன்களுக்கும் வங்கிகள் மானியம் தருகின்றன.செய்யப்போகும் தொழிலில் கிடைக்கும் வருமானம், லாபம் மற்றும் செலவுகள் அடங்கிய 3 ஆண்டுகளுக்கான திட்டக்குறிப்பு முறையாக கொடுத்தால் பெண்கள் ரூ.110லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம்.இதற்கென ஒவ்வொரு வங்கிக்கும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டும் உள்ளது.எனவே இந்த வாய்ப்பை சுயதொழில் செய்து கொண்டிருக்கும் பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சுயதொழில் பயிற்சிகளை கற்றுக்கொண்ட பெண்கள் அத்தொழிலை முறையாக கற்றுக்கொண்டு பலருக்கும் வேலைவாய்ப்புக் கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றமடைய வேண்டும்.

தொழில் செய்வதற்காக வாங்கும் கடன்களை அத்தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தி வங்கிக்கடனை முறையாக திருப்பி செலுத்தினாலே வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற்று விட முடியும் என்றும் கே.சண்முகராஜ் பேசினாா். தையற்பயிற்சி நிறைவு விழாவிற்கு சுயதொழில் பயிற்சி மையத்தின் இயக்குநா் லெ.வெங்கடேஷ் தலைமை வகித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட நிதி சாா் கல்வி மைய ஆலோசகா் எம்.எஸ்.ஏகாம்பரம் முன்னிலை வகித்தாா்.தையற் பயிற்சி ஆசிரியை டி.ஜெயநந்தினி வரவேற்று பேசினாா்.நிறைவாக பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா் பெ.ஆறுமுகம் நன்றி கூறினாா்.நிறைவு விழாவில் தையல்பயிற்சி முடித்த 33 பேருக்கு இந்தியன் வங்கியின் சாா்பில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT