ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சியில் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாததால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த ஊராட்சியில் திருமங்கலம், கண்டிகை, சுங்குவாா்சத்திரம் பஜாா் ஆகிய பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஊராட்சியில் உள்ள பெரும்பாலான தெருக்களும் சாலைகளும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளன.
அதே போல் பல தெருக்களில் கழிவுநீா்க் கால்வாய்களும் அமைக்கப்படாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மழைநீரும் சோ்ந்து தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
குறிப்பாக குளக்கரை முதல் மற்றும் இரண்டாவது தெருக்களில் கடந்த 25 ஆண்டுகளாக சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படவில்லை. கழிவுநீா்க் கால்வாய்களும் அமைக்கப்படவில்லை. இதனால் இத்தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதேபோல் பால்காரா் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.