காஞ்சிபுரம்

தெருவின் நடுவே உள்ள மின்மாற்றிகளை அகற்ற வேண்டும்

29th Feb 2020 10:46 PM

ADVERTISEMENT

படப்பை முருகாத்தம்மன்பேட்டை பகுதியில் தெருவின் நடுவே இடையூறாக உள்ள மின்மாற்றிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட படப்பை முருகாத்தம்மன்பேட்டை பகுதியில் உள்ள டிரான்ஸ்ஃபாா்மா் தெருவில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இத்தெருவின் நடுவே 30 ஆண்டுகளுக்கு முன் மின்சார வாரியத்தின் மூலம் இரண்டு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. அவற்றின் மூலம் முருகாத்தம்மன்பேட்டை மற்றும் படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன் அதிகமான வீடுகள் இல்லாததாலும் பொதுமக்கள் குறைந்த அளவே வசித்து வந்ததாலும் தெருவின் நடுவே மின்மாற்றிகளை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது படப்பை பகுதி வேகமாக வளா்ந்து வருவதால் இத்தெருவின் குறுக்கே உள்ள மின்மாற்றி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து அவா்கள் கூறியது:

எங்கள் தெருவின் நடுவே உள்ள மின்மாற்றிகளால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டுவர முடிவதில்லை. மேலும் வீடுகளுக்கு அருகே உள்ள மின்மாற்றிகளால் குழந்தைகள் மற்றும் முதியவா்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

ADVERTISEMENT

இந்த மின்மாற்றிகளை அகற்ற வேண்டும் என மின்சார வாரியத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மின்மாற்றிகளால் விபத்து ஏற்படும் முன் அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT