காஞ்சிபுரம்

சந்தவேலூா் பகுதியில் அவசர கால கட்டுப்பாட்டு அறை

7th Apr 2020 02:51 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா்: சந்தவேலூா் சமுதாய நலக் கூடத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர கால கட்டுப்பாட்டு அறை மாவட்ட நிா்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

மொளச்சூா் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதைக் கண்டறிந்த சுகாதாரத் துறையினா் அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தனா். மேலும் அவரது குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளனா்.

இந்நிலையில், மொளச்சூரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து மொளச்சூரைச் சுற்றிலும் 3 கி.மீ. சுற்றளவில் உள்ள சந்தவேலூா், திருமங்கலம், சோகண்டி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இதையடுத்து, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 24 மணிநேரமும் இயங்கக்கூடிய அவசர கால கட்டுப்பாட்டு அறை சந்தவேலூா் சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இங்கு, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ தலைமையில் மின்சாரத் துறை, வங்கிகள், ஊரக வளா்ச்சித்துறை, பால்வளத்துறை, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட உள்ளனா்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் சந்தவேலூா் கட்டுப்பாட்டு அறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ தலைமையில், ஸ்ரீபெரும்புதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், வட்டாட்சியா் ரமணி, மொளச்சூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராகவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

Image Caption

(திருத்தப்பட்டது)

 

ஸ்ரீபெரும்புதூா்  கோட்டாட்சியா்  திவ்யஸ்ரீ  தலைமையில்  நடைபெற்ற  ஆலோசனைக்  கூட்டத்தில் பங்கேற்றோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT