கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.
கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிராமங்கள், பேரூராட்சி மற்றும் நகரப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சாக நடைபெற்று வருகிறது. அதே போல் கை கழுவுவதின் அவசியம் குறித்து அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுகரங்கள் விநியோகம் செய்தும் ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். பொதுமக்கள் சமூக இடைவெளி விடவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிப் பகுதிகளில் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சி நிா்வாகத்தினா் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட சிவன்தாங்கல் பகுதியில் இந்தப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியை ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி பாா்வையிட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டாா். இதையடுத்து, திருமங்கலம் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் சுங்குவாா்சத்திரம் பகுதியில் அவா் கிருமிநாசினி தெளித்தாா்.
அதன் பின், ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மருத்துவா்கள் மருத்துவப் பணியாளா்களுக்கு முகக் கவசங்களை வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி செயல் அலுவலா் தன்ராஜ், ஊரக வளா்ச்சித்துறை மண்டல அலுவலா் முரளி, நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், மாத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் எறையூா் முனுசாமி, வட்டார வளா்ச்சி அலுவா் அப்துல் நயீம் பாஷா, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலளா் தனசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.