ரூ.123.75 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் : ஓராண்டுக்குப் பின் மீண்டும் தொடக்கம்

 ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ரூ.123.75 கோடி மதிப்பில்
ரூ.123.75 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் : ஓராண்டுக்குப் பின் மீண்டும் தொடக்கம்


 ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ரூ.123.75 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு, கடந்த ஒரு  வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.  
ஸ்ரீபெரும்புதூர் பேருராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.123.75 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள சுமார் 18 கி.மீ. தொலைவு உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் குழாய்கள் பதிக்க 11 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியது.  
மீதமுள்ள 7 கி.மீ. தொலைவிற்குக் குழாய்கள் பதிக்க  தேசிய நெடுஞ்சாலைத்துறை கடந்த ஒரு வருடமாக அனுமதி வழங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், பாதாள சாக்கடை திட்ட பணியையும், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியும் கடந்த ஒரு  வருடமாக  சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியம் நிறுத்தி வைத்திருந்தது. 
இதனால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குடிநீர்த் திட்டப் பணிகள் மற்றும் பாதாளசாக்கடைத் திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 
இந்த நிலையில், தேசிய  நெடுஞ்சாலைத்துறை  அண்மையில் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தற்போது பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகவும், குடிநீர் வழங்கும் திட்டத்திற்காகவும் குழாய்கள் பதிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. 
இதற்காக ராஜீவ்காந்தி நினைவகம் மற்றும் சுங்கச்சாவடி பகுதிகளில் சென்னை-பெங்களூரு  தேசிய  நெடுஞ்சாலையின்  கீழ் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, பூமிக்கடியில் இயந்திரங்கள் உதவியுடன் குழாய்கள் பதிக்க பாதை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்த பணிகள் முடிவடையும் பட்சத்தில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணியும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியும் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com