சட்டப்பேரவை மனுக்கள் குழு விரைவில் காஞ்சிபுரம் வருகை: அக்.18-க்குள் பொதுமக்கள் மனுக்களை அனுப்பலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சட்டப்பேரவை மனுக்கள் குழு விரைவில் வருகை தர இருப்பதால் வரும் அக்டோபர் 18 -ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கலாம் என ஆட்சியர் பா.பொன்னையா


காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சட்டப்பேரவை மனுக்கள் குழு விரைவில் வருகை தர இருப்பதால் வரும் அக்டோபர் 18 -ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கலாம் என ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை  தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு விரைவில் சட்டப்பேரவை மனுக்கள் குழு வருகை தர உள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்னைகள், குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப் பேரவை, சென்னை-600009 என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் மாதம் 18-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும், பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களால் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். 
மனுக்கள் ஒவ்வொன்றும் ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரு துறை சார்ந்ததாகவும் இருத்தல் அவசியம்.
பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாகவும்  இருக்க  வேண்டும்.     
தனி நபர் குறைகள், நீதிமன்றத்தின் முன்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன்கள், தொழிற்கடன்கள் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல்  ஆகியவைகளாக மனுக்கள் இருக்கக்கூடாது. இந்த மனுக்களை சட்டப்பேரவை மனுக்கள் குழு இந்த மாவட்டத்துக்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். 
மனுதாரர் முன்னிலையில் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள  பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.
பின்னர், குழு ஆய்வு செய்யும் நாள் குறித்து மனுதாரர்களுக்கு தனியாக தகவல் அனுப்பி வைக்கப்படும்.
எனவே, மனுக்களை வரும் அக். 18-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதற்குப் பின்னர் அனுப்பும் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com