தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா

தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை, வேலூர்,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில்  மாணவர் காவல் படை தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா


தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை, வேலூர்,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில்  மாணவர் காவல் படை தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் பயிற்சிப் பிரிவு டிஐஜி எம்.சத்யப்பிரியா தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் மாணவர் காவல் படை தொடங்கி செயல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காவல் பயிற்சிப் பிரிவு டிஐஜி எம்.சத்யப்பிரியா தலைமை வகித்தார். மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, ஏடிஎஸ்பி சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களிடம் டிஐஜி எம்.சத்யப்பிரியா கூறியது:
மாணவர் காவல் படை முதல்முதலாக கேரளத்தில் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து, இந்தியா முழுவதும் விரிவுபடுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார். 
அதன்பேரில் தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை, திருவண்ணாமலை,திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மாணவர் காவல் படை தொடங்கப்படும். 
இந்த 5 மாவட்டங்களிலும் பள்ளிக்கு 44 பேர் வீதம் 1,117 பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படும். அதேபோல், ஒவ்வொரு பள்ளிக்கும் அருகே உள்ள காவல் நிலையத்தில் இருந்து இரு காவலர்களும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், பள்ளிகளில் 8, 9 ஆகிய வகுப்பு மாணவ, மாணவியருக்கு பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன, அதைத் தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணங்கள், ஊழலைத் தடுக்கும் முறைகள், சாலைப்  போக்குவரத்து விதிமுறைகள் கற்றுக்கொடுப்பதே மாணவர் காவல் படையின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு நாள் சனிக்கிழமை மட்டும் இப்பாடம் நடத்தப்படும். சிறு வயதிலேயே மாணவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத்தரவும், தவறான எண்ணங்கள் வளர விடாமல் தடுக்கவும், மாணவர்கள் செய்யும் தவறுகளை மாணவர்களே கண்டுபிடித்து தடுக்கவும் மாணவர் காவல் படை உதவியாக இருக்கும்.
இதைத் தொடர்ந்து படிப்படியாக தமிழகம் முழுவதும் மாணவர் காவல் படை விரிவுபடுத்தப்படும். இப்படைக்கென முத்திரையுடன் கூடிய தொப்பி வழங்கப்படும். இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com