காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பவித்ரோற்சவம் கடந்த 12-ஆம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. மறுநாள் அதிவாசத்தை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், பவித்ரம் சாற்றுதல் நிகழ்வுகளும் நடந்தன.
இதையடுத்து, திங்கள்கிழமை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கேடய வாகனத்தில் திருவடிக்கு வீதியுலா வந்து பின்னர் மீண்டும் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.
தொடர்ந்து, வரும் 20-ஆம் தேதி வரை தினசரி காலையில் யாகசாலை பூஜைகளும், மாலையில் பெருமாள் திருவடி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.
வரும் 20-ஆம் தேதி நடைபெறும் பவித்ரோற்சவத்தின் கடைசி நாளன்று பெருமாள் மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.