வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

கோயில் கடைகளுக்கு வாடகை தராதோர் பட்டியல் வெளியீடு

DIN | Published: 12th September 2019 04:44 AM


காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகள் நடத்துவோர்களில் பல லட்சம் நிலுவை வைத்திருப்பவர்கள் பற்றிய பட்டியலை கோயில் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. 
காஞ்சிபுரத்தில் முக்கியமான சிவாலயங்களில்  ஒன்றாக விளங்குவது கச்சபேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலுக்கு சொந்தமான கடைகள், அடிமனைகள்  உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இவற்றினை அனுபவித்து வரும் பலரும் வாடகை கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இவர்களைப் பற்றிய பட்டியலை கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகையாக எழுதி கோயிலின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள நான்கு கால் மண்டபத்தில்  வைத்துள்ளது. 
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை கட்டட வாடகைதாரர்கள் 9 பேரும், அடிமனை வாடகை தாரர்கள் 40 பேரும் வாடகை  கொடுக்காமல் இருந்து வந்ததால் அவர்களது பட்டியலை முதற்கட்டமாக  அறிவிப்பு பலகையாக எழுதி வைத்திருக்கிறோம்.
இந்த 49 பேரில் குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிக பட்சம் ரூ.7.59 லட்சம் வரை வாடகை பாக்கி உள்ளவர்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. யார், யார் கோயிலுக்கு வாடகை பாக்கி எவ்வளவு தர வேண்டும் என்ற அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும் என்றார். 
இது குறித்து சிவபக்தர்களில் ஒருவரான ஆ.தில்லிபாபு கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பல கோயில்களில் வாடகை  கொடுக்காமல் இருந்து வருபவர்களின் பட்டியலைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற்றுள்ளோம். சில கோயில்களில் அதன் நிர்வாகிகள் வழங்கவில்லை. வாடகை நிலுவை வைத்திருப்பவர்கள் பற்றிய பட்டியலை முதலாவதாக கச்சபேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதே போன்று பிற கோயில்களிலும் வாடகை நிலுவை வைத்திருப்பவர்கள் பற்றிய பட்டியலை  வெளியிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனுவாக அனுப்பியிருக்கிறோம் என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
செப்டம்பர் 19 மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா
பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை
பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு