வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிகளில்  கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடக்கம்

DIN | Published: 11th September 2019 04:30 AM


சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் கடற்கரைப் பகுதிகளில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. 
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து கலைச் சிற்பங்களைக் காண உலகின் பல நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகின்றனர். 
இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பகுதியை நவீனப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தொல்லியல் பாதுகாப்புத் துறை உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பகுதியில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் நிதியுதவியுடன் கடற்கரை கோயிலை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலர் சக்திவேல் கூறியது: மாமல்லபுரத்தில் சுற்றுலா இடங்களைக் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. 
இதற்காக தொல்லியல் துறையினர் இடத்தைத் தேர்வு செய்துகொடுக்காததால் அந்த நிதி திரும்ப அனுப்பப்பட்டது. 
தற்போது, கடலோர கரைப் பகுதிக்கு ஆட்சேபனை இல்லை என்பதால் அங்கு கண்காணிப்பு கேமராகள் பொருத்தும் பணியை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.
இதற்காக 17  கண்காணிப்பு கேமராக்கள் 10, 15 மீட்டர் தொலைவில் தானியங்கியாக சுழலும் வகையில் பொருத்தப்படுகின்றன. தற்போது, கேமரா பொருத்துவதற்காக தூண் அமைக்க பள்ளங்கள் தோண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்ததும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டை கடலோரக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்மூலம் கடற்கரையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க உடனுக்குடன் கண்காணிக்க முடியும் என்றார்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
செப்டம்பர் 19 மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா
பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை
பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு