மூங்கில் மண்டப சாலையில்  மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவுள்ள மூங்கில் மண்டப சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது நகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக  இருந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதி.
போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதி.



காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவுள்ள மூங்கில் மண்டப சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது நகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக  இருந்து வருகிறது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நகரின் மையப்பகுதியில் நான்கு பிரதான சாலைகள் ஒன்றாக சந்திக்கும் இடங்களில் ஒன்று  மூங்கில் மண்டபம் எனப்படுகிறது.
முக்கியமான மூன்று கோயில்களுக்கு இச்சாலை சந்திப்பு வழியாகவே செல்ல வேண்டும் என்பதால் மூன்று கோயில் மண்டபம் என்பது மருவி மூங்கில் மண்டபம் எனவும் பெயரானதாக கூறப்படுகிறது.
வள்ளல் பச்சையப்பன் தெரு, காந்தி சாலை, காமராஜர் சாலை, மடம் தெரு ஆகிய 4 முக்கிய சாலைகளும் சந்திக்கும் இடமே மூங்கில் மண்டபமாகும். 
வள்ளல் பச்சையப்பன் தெரு வழியாக ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் உத்தரமேரூர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது.
காந்தி சாலையிலும், காமராஜர் சாலையிலும் மிகப் பிரபலமான வர்த்தக நிறுவனங்கள், பட்டுக்கடைகள், முக்கியமான கோயில்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் உள்ளன. இவை நகரின் மிக முக்கிய பிரதான சாலைகளாகவும்  உள்ளன. 
மற்றொரு சந்திப்புத் தெருவான மடம் தெருவும் ஆட்சியர் அலுவலகம், அண்ணா நூற்றாண்டு பூங்கா, திரையரங்கம் ஆகிய பகுதிகளுக்கும் செல்லும் சாலையாகும்.
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியாகவும், முக்கிய சாலைகள் சந்திக்கும் இடமாகவும் இருந்து வரும் மூங்கில் மண்டபத்தில் எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
காமராஜர் சாலையிலிருந்து எதிர்புறம் உள்ள வள்ளல் பச்சையப்பன் தெருவுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள காவல்துறையினரால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகள்(பேரிகார்டுகள்) வரை வந்து, சந்து போன்ற பகுதிக்குள் நுழைந்து, அதன் பின்னரே வள்ளல் பச்சையப்பன் தெருவுக்குச் செல்ல வேண்டி உள்ளது.
இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் வருவோர் எண்ணிக்கை அதிகமாகி அந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகளும் அக்குறுகிய சந்தில் வளைந்து, நெளிந்து செல்ல வேண்டிய கட்டாய நிலையிருக்கிறது.  நான்கு சக்கர வாகனங்கள் காமராஜர் சாலையிலிருந்து நேரடியாக வள்ளல் பச்சையப்பன் தெருவுக்குள் செல்ல முடியாமல் (ஒரு வழிப்பாதையாக அண்மையில் மாற்றப்பட்டது) விளக்கொளி சாலை வழியாக வந்தே செல்ல வேண்டியிருக்கிறது. இதனால்  4 சக்கர வாகன ஓட்டிகளுக்கு நேரமும், எரிபொருள் செலவும் வீணாகிறது.
பிரபலமான பட்டுக்கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், முக்கிய கோயில்களும் இருப்பதால் முகூர்த்த நாள்களிலும், திருவிழாக் காலங்களிலும்  மூங்கில் மண்டபம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை காவல்துறையினரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்பதே உண்மை.  
இவையனைத்துக்கும் தீர்வு காணும் விதமாக போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக மூங்கில் மண்டப பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியது  அவசரமும், அவசியமுமாகும். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதியும் அடைவார்கள்.
இது குறித்து விளக்கொளி கோயில் தெருவைச் சேர்ந்த ஆர்.மாதவன் என்பவர் கூறியது:
நகரிலேயே போக்குவரத்து அதிகமான பகுதி மூங்கில் மண்டபம். இப்பகுதியில் மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல்  வெகுவாகக் குறைந்து விடும்.  காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் நேரடியாக வள்ளல் பச்சையப்பன் தெருவுக்குள் செல்ல அனுமதித்தால் நேரம் வீணாவதும், எரிபொருள் செலவும் குறைந்து விடும். தற்போது 4 சக்கர வாகனங்கள் சுமார் 4 கி.மீ.தூரம் சுற்றிச் செல்லவேண்டி இருக்காது. வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியடைவார்கள்.
ஆனால் மூங்கில் மண்டபத்தில்  மேம்பாலம் அமைக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் போதும், தேரோட்டத்தின் போதும் சுவாமி மூங்கில் மண்டபத்தின் வழியாகவே கடந்து செல்லும். 
இது மன்னர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். ஆகம விதிகளின்படியே தேரோட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. தேரோட்டப் பாதையை மாற்ற வாய்ப்பில்லாததால் தான் காஞ்சிபுரத்தில் மேம்பாலம் கட்டப்படாமல்  உள்ளது. மாவட்ட நிர்வாகம் தேரோட்டத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் மேம்பாலம் கட்ட வேண்டியதும் மிக அவசியமாகும். அதிகரித்து வரும் ஜனப்பெருக்கம், வாகனப் பெருக்கம் ஆகியவற்றிலிருந்து நகர மக்களைக் காப்பாற்ற தொங்கும் பாலமாவது அமைக்க வேண்டும். தேர் வரும் நாள்களில் அப்பாலத்தை அகற்றி விட்டு தேரோட்டம் முடிந்த பிறகு மீண்டும் தொங்கு பாலத்தை அமைக்கலாம் எனவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com