காஞ்சிபுரம்

தேசிய ஊட்டச்சத்து மாதம்: விழிப்புணர்வுப் பேரணி

10th Sep 2019 04:54 AM

ADVERTISEMENT


திருக்கழுகுன்றம் அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. 
திருக்கழுகுன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினம் பகுதிக்குட்பட்ட நல்லாத்தூர்-பொம்மராஜபுரம் அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர் தயாளமணி தலைமையில் நடைபெற்ற பேரணியில், அங்கன்வாடி பணியாளர் வீரலட்சுமி மற்றும் மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 
இதில், ஊட்டச்சத்து அளித்து உறுதி மிக்க குழந்தைகளை வளர்க்கவும், வலிமையான தேசத்தை உருவாக்கவும் உறுதிமொழி  ஏற்கப்பட்டது. 
இப்பேரணியில் பங்கேற்றோர், முழு சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் கைகளை சோப்பு போட்டு கழுவியபின் உணவுப் பொருள்களைச் சாப்பிடச் செய்தல், கீரைகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு உணவாக அளித்தல், வசிக்கும் இடத்தினை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். 
நல்லாத்தூர்-பொம்மராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் தொடங்கிய பேரணி, ஊராட்சிக்குட்பட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் அங்கன்வாடி மையத்தை வந்தடைந்தது.
மதுராந்தகத்தில்...
சமூக நலத்துறை சார்பில், போஷன் அபியான் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
இந்நிலையில், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் ஊட்டச்சத்து குறைவினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கத்தில் வார விழாவை மாத விழாவாக கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. 
அதன்படி செப். 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை அச்சிறுப்பாக்கத்தில் உள்ள 137அங்கன்வாடி மையங்களிலும், அரசுப் பள்ளிகளிலும் ஊட்டச்சத்து குறைபாட்டினைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு, நடைபெற்று வருகின்றன.                    
அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு முகாமுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் செ.எலிசபெத் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். 
 ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அனைத்து நிகழ்வுகளும் போஷன் மா என்ற இணைய தளத்தில் பதியப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக அதிகாரிகள் செய்து வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT