காஞ்சிபுரம்

குழந்தைகளுக்கு டெங்கு, டிப்தீரியா தடுப்பூசி அளிக்க நடவடிக்கை

10th Sep 2019 04:52 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு டெங்கு, டிப்தீரியா தடுப்பூசி அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் பா.பொன்னையா  திங்கள்கிழமை அறிவுறுத்தினார். 
டெங்கு மற்றும் டிப்தீரியா தடுப்பு நடவடிக்கை குறித்த  ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டெங்கு மற்றும் டிப்தீரியா பரவாமல் தடுப்பதற்காக பள்ளி, அங்கன்வாடி மற்றும் வீடுகளில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி இடுமாறு சுகாதாரத்துறையினரிடம் ஆட்சியர்  அறிவுறுத்தினார்.  மாவட்டத்தில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 8,57,739 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
இதுவரை 3,13,764 குழந்தைகளுக்கு தடுப்பூசி இடப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளுக்கு வரும் நாள்களில் தடுப்பூசி இடவேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக கொசுப்புழு தடுப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தினந்தோறும் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். 
இக்கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குநர் ஜீவா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் செந்தில் குமார், பழனி , முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .
 

ADVERTISEMENT
ADVERTISEMENT