காஞ்சிபுரம்

நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை: ஆட்சியர்

7th Sep 2019 04:07 AM

ADVERTISEMENT


மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
காஞ்சிபுரத்தில்  பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், நீர் பாதுகாப்பு  மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.
இப்பேரணியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியைத் தொடங்கி வைத்து, ஆட்சியர் பா.பொன்னையா பேசியது:
நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் அகில இந்திய அளவில் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் 924 ஏரிகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 968 ஏரிகளும் உள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் உள்ளன. மழை நீரை சேமித்து வைக்க அதிகமான அளவு நீர்நிலைகளை நமது முன்னோர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளின் முன்பாக மழைநீரை சேகரிக்கும் தொட்டி  அமைத்து குடிநீர்த் தேவைகளுக்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். 
எதிர்காலத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து இளையதலைமுறையினர் மரங்களை அதிகமான அளவில் நட்டு மண்வளம் காத்து மழையைப் பெற்று வளம் பெறவும், நீர் மாசு படாமல் பாதுகாக்கவும் வேண்டும். மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். 
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணியன், மேஜைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஷாமினி, கேரம் விளையாட்டு வீராங்கனை பரிமளாதேவி, கேரம் விளையாட்டு வீரர் ரமேஷ்பாபு, டென்னிஸ் வீராங்கனை ருஷ்மி சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT