காஞ்சிபுரம்

மாமல்லபுரம் மயானத்தில் மின்சார தகன மேடை அமைக்கக் கோரிக்கை

4th Sep 2019 04:24 AM

ADVERTISEMENT


மாமல்லபுரம் மயானத்தில் மின்சார தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், பிகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் பேருந்துகளில் குழுவாகவும், குடும்பமாகவும் வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் வயதானோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இங்கேயே விட்டுச் செல்கின்றனர். அவர்கள், குடும்பம், உறவினர்களால் கைவிடப்பட்டு, பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
தமிழகத்தில் வயதானவர்களையும் மனநோயாளிகளையும் விட்டுச் செல்லும் முதலாவது இடமாக ராமேசுவரமும், இரண்டாவது இடமாக மாமல்லபுரமும் உள்ளதாக தமிழக சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகின்றனர்.
இதில், நடமாட இயலாத நிலையில் உள்ள முதியவர்கள் சாலையோரத்திலேயே தங்கி, சாப்பாட்டுக்கு வழியில்லாமல் உயிரிழக்கின்றனர். மேலும், கடலில் மூழ்கி இறப்போர், அடையாளம் தெரியாத சடலங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பப்படுகின்றன. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து புகார் பெற்று இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்யவும் எரியூட்டவும் வேண்டும். இவ்வாறு இறப்போரின் எண்ணிக்கை மாமல்லபுரத்தில் அதிகரித்து வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் மாமல்லபுரத்தில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் இறப்போரை அடக்கம் செய்யவோ எரியூட்டவோ ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலவாவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால், மின்சார தகன மேடையில் ஒரு சடலத்துக்கு ரூ. 1,000 மட்டுமே கட்டணமாக  பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிட்லபாக்கம் , நாவலூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மின்சார தகன மேடை உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள மயானத்தில் மின்சார தகன மேடை இல்லாததால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது மாமல்லபுரம் மயானம் முழுவதும் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. எனவே, மாமல்லபுரம் மயானத்தில் மின்சார தகன மேடை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT