காஞ்சிபுரம்

குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: நோய் ஏற்படும் அபாயம்

4th Sep 2019 04:25 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரம் நகராட்சியில் தொடர்ந்து 3 மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
காஞ்சிபுரம் நகராட்சியில் 24, 25 ஆகிய வார்டுகளில் உள்ள ஐதர்பட்டரை தெரு, விஜயகிராமணி தெரு, புதுத்தெரு, பானக்காரத் தெரு, தும்பவன-அருணாசலத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்,  நகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
துர்நாற்றம் வீசும் தண்ணீரைத் தான் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து விஜயகிராமணி தெருவைச் சேர்ந்த லெட்சுமி கூறியது:
பொதுக் குழாயில் தொடர்ந்து 3 மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. அத்திவரதர் விழா நிறைவடையும் வரை பொறுத்திருந்தோம். அதன்பிறகு பலமுறை தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 
கடந்த மாதம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்து, சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். அதன்பிறகு நடவடிக்கை இல்லை. 
காந்தி சாலை நகராட்சி தொடக்கப் பள்ளி அருகில் உள்ள பாதாள சாக்கடை உடைத்து, அதிலிருந்து வெறியேறும் கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது. 
இதனால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக ஓரிரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ரங்கசாமி குளம் அருகே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக அவர் கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT