காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: ஒருவர் பலி

4th Sep 2019 04:24 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரம் அருகே கல் குவாரியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 42 ஆடுகள் பலியாகின.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுகாவுக்கு உள்பட்ட மாகறல் அருகே சித்தலப்பாக்கத்தில் குன்னவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதிக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. 
இக்கல் குவாரி வளாகத்தில் வெடி மருந்து கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென வெடித்துச் சிதறின. 
அப்போது, கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்த திருச்சி மாவட்டம், பழையசீவரம் பகுதியைச் சேர்ந்த மோகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரைச் சேர்ந்த விஜயன் (45), மாகறலைச் சேர்ந்த லோகநாதன் (53) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
தகவலறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி. கண்ணன், டிஎஸ்பி கலைச்செல்வன், வாலாஜாபாத் வட்டாட்சியர் கோடீஸ்வரன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், தீத்தடுப்புக் குழு மாவட்ட உதவி அலுவலர் திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்த விபத்தில் கல் குவாரி வளாகத்தில் இருந்த அலுவலகக் கண்ணாடிகள், கணினிகள் உடைந்து நொறுங்கின.
இதுதொடர்பாக கிடங்கில் பணியாற்றிய ஆறப்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்திடம் (25) போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
42 ஆடுகள் பலி: இந்த வெடிவிபத்தில் கிடங்கு அருகே மேய்ந்துகொண்டிருந்த சித்தலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜனுக்குச் சொந்தமான 40 ஆடுகளும், ஜெயராமனுக்குச் சொந்தமான 2 ஆடுகளும் உடல் சிதறி உயிரிழந்தன.
இந்த விபத்து தொடர்பாக மாகறல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT