காஞ்சிபுரம்

கெட்டுப்போன இறைச்சிகளை மீன்களுக்கு உணவாக அளித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

6th Oct 2019 04:12 AM

ADVERTISEMENT

மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவாக, கெட்டுப்போன இறைச்சிகள், அழுகிய முட்டைகள் போன்றவற்றைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
 இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீன் பண்ணைகள் நடத்தும் விவசாயிகள், மீன்களின் வகைகளுக்கு ஏற்ப அதாவது கெண்டை மீன்களுக்கு மூழ்கும் தன்மையுள்ள குருணை தீவனம் அல்லது கலவை தீவனம் தரலாம். திலேப்பியா மீன்களுக்கு மிதவைத் தீவனங்கள் சிறந்ததாகும்.
 மீன்வளர்ப்பு விவசாயிகள் தங்களது பண்ணையில் வளரும் மீன்களுக்கு தகுந்த உணவினைத் தேர்வு செய்து வழங்க வேண்டும். முக்கியமாக கெட்டுப்போன கோழி இறைச்சிகள், அழுகிய முட்டைகள், அழுகிய பட்டுப்புழுக்கள் மற்றும் இறந்த விலங்குகள் இவை எதையும் மீன் பண்ணையில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 கெட்டுப் போன இறைச்சியை உண்ணும் மீன்களை உணவாக உட்கொண்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே இந்திய அரசின் தரச்சான்றுடன் கூடிய மீன் உணவுகளை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.
 மேலும் தகவல்கள் பெற விரும்பினால் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரை, காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை-600115 என்ற முகவரியிலோ அல்லது 044-24492719 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT