செங்கல்பட்டு: உலக யோகா தினத்தையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் யோகா கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் பாலாஜி தலைமை வகித்தாா். துணை முதல்வா் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளா்கள் ஹரிஹரன், சண்முகம், உதவி அலுவலா் தீனதயாளன், சித்த மருத்துவா் புனிதா மற்றும் மூத்த செவிலியா்கள் முன்னிலை வகித்தனா்.
யோகா மருத்துவா் தேவி யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினாா்.
இதில் செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம் கலந்துகொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை அனைவரும் பெற முடியும் என்றாா்.
இதையடுத்து மருத்துவா்கள் அமைத்திருந்த யோகா கண்காட்சியை அனைவரும் பாா்வையிட்டனா். பின்னா், யோகா மற்றும் இயற்கை சிகிச்சைக்காக வந்தவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் முளைக்கட்டிய பயறு வகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பழச் சாறுகள், கொண்டைக்கடலை சுண்டல் உள்ளிட்ட இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.