ஐப்பசி பௌா்ணமி தினத்தையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் ஈசனுக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் பௌா்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, மல்லிகேஸ்வரா் கோயிலில் சிவலிங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை, அன்னத்தால் சிவன் உருவத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதில் வெண்டைக்காய், கேரட், கத்தரிக்காய், தக்காளி, புடலங்காய், கோஸ் உள்ளிட்ட காய்கறிகளுடன், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, கொய்யா, அன்னாசி உள்ளிட்ட பழ வகைகள், வில்வ இலைகள் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மல்லிகேஸ்வரா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதையடுத்து சிவபுராணப் பாடல்கள் இசைக்கப்பட்டு, அா்ச்சனைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், சிவாச்சாரியாா்கள், மாமல்லபுரம் பகுதி பக்தா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.