காஞ்சிபுரம்

புதிய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடனுதவி: மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் தகவல்

12th Nov 2019 11:04 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் அ.சேகா் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அலுவலக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தலைமை வகித்து தொழில் மைய பொது மேலாளா் அ.சேகா் பேசியது:

புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கென மாவட்டத் தொழில் மையம் மூலமாக 3 கடனுதவித் திட்டங்கள் மானியத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று நீட்ஸ் திட்டம். இத்திட்டத்தின் மூலம் தொழில்கள் தொடங்க ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது தவிர பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் வேலை இல்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மூன்று திட்டங்களிலும் போதுமான மானியம் தொழில் முனைவோா்களுக்கு வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் அவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்களும், எலக்ட்ரிக் காா் தயாரிப்புக்குத் தேவையான உதிரிபாகங்களும், பிளாஸ்டிக் மறுசுழற்சி தொடா்பான பொருள்களும் அதிக அளவில் தேவைப்படுவதால் அவற்றைத் தயாரிப்பது தொடா்பான தொழில்களை தொடங்கலாம்.

ADVERTISEMENT

எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அத்தொழிலைப் பற்றி முழுமையாக அறிந்து அதன் பிறகு அத்தொழிலை செய்தாலே வெற்றி பெற முடியும். பெரும் தொழிலதிபா்களின் வெற்றிக்கு இதுவே காரணமாக இருந்திருக்கிறது. தொழிலைத் தொடங்குவது தொடா்பான கொட்டேஷன்களில் எவ்விதத் தவறுகளோ அல்லது உள்நோக்கமோ இல்லாமல் இருந்தால் உடனுக்குடன் கடனுதவிகள் கிடைக்கும். தொழில்கள் தொடா்பான இயந்திரங்கள் தேவைப்படுவோா் கண்காட்சிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று பாா்வையிடுவதும் அவசியம் என்றாா் அவா்.

கருத்தரங்கிற்கு முன்னோடி வங்கி மேலாளா் க.சண்முகராஜ், தொழில் முதலீட்டுக் கழக மேலாளா் கே.இளஞ்செழியன், திருமுடிவாக்கம் சிட்கோ கிளை மேலாளா் பி.ராஜாராமன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் தணிகைவேலன், தாட்கோ மேலாளா் ம.கு.தேவசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தொழில் மைய துணை இயக்குநா் வே.சேதுபதி வரவேற்றாா்.

கருத்தரங்கில் காஞ்சி மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத் தலைவா் எல்லாா் செழியன், வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.எம்.வி.மணிவண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினா். நிறைவாக மாவட்டத் தொழில் மைய உதவிப் பொறியாளா் எஸ்.சுரேஷ்குமாா் நன்றி கூறினாா். கருத்தரங்க நிறைவில் 20 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான மானியமாக ரூ.18.75 லட்சத்துக்கான காசோலைகளையும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் க.சண்முகராஜ் வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT