திருக்கழுகுன்றம் அருகே கட்டுமான நிறுவன கண்காணிப்பாளா் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருக்கழுகுன்றம் கொத்திமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன் (53). அவா் கல்பாக்கத்தில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், மஞ்சுநாதன் கடந்த 7-ஆம் தேதி, எச்சூா் ஏரிக்கரை பகுதியில் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இந்தக் கொலை தொடா்பாக திருக்கழுகுன்றம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதன் அடிப்படையில், இவ்வழக்கு தொடா்பாக கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் அண்ணாமலையை (45) திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கும் மஞ்சுநாதனுக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், சம்பவ நாளில் குடிபோதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, ஆத்திரத்தில் தன் கையில் இருந்த இரும்புத் தடியால் மஞ்சுநாதனைத் தாக்கிக் கொலை செய்ததாக அண்ணாமலை ஒப்புக் கொண்டாா். அவரை போலீஸாா் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மாவட்டச் சிறையில் அடைத்தனா்.