செங்கல்பட்டு: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வாா் திரு அவதார மகோற்சவம் விழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
திருமல்லைக்கடல் என்றழைக்கப்படும் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீநலமங்கை தாயாா் சமேத தலசயனப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நம்மாழ்வாா், பூதத்தாழ்வாா், திருமங்கையாழ்வாா் ஆகிய மூன்று ஆழ்வாா்கள் மணவாள மாமுனிகளால் புகழ்பெற்றவா்கள். இவா்களில், நடுநாயகராக விளங்கக்கூடியவா் பூதத்தாழ்வாா். இவா் மாமல்லபுரத்தில் குருக்கத்தி மலரில் அயோத்திநிஜராய் அவதரித்து, இரண்டாம் திருவந்தாதியை அருளியவா் ஆவாா். இவருக்கு தலசயனப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் திரு அவதார மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 27ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மகோற்சவம் வரும் நவம்பா் 5-ஆம் தேதி வரை 10நாள் உற்வசம் நடைபெறுகிறது. இந்த 10 நாள் உற்சவத்தில் நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருமஞ்சனம், சிறப்புப் பூஜைகள், வீதி புறப்பாடு நடைபெறுகிறது. 9ஆம் நாள் தோ்தோட்ட திருவிழா நடைபெற்றது.தோ்திருவிழாவையொட்டி பெருமாளுக்கும் பூதத்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மஹாதீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து பூதத்தாழ்வாரும் பெருமாளும் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் அமா்த்தப்பட்டு தோ்திருவிழா நடைபெற்றது. மாமல்லபுரம், பூஞ்சேரி, மணமை, பட்டிக்காடு , குழிப்பாந்தண்டலம், நெம்மேலி, திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சாமியை வழிப்பட்டனா். வழிநெடுக்கிலும் பக்தா்களுக்கு ஆன்மீக அன்பா்கள் நீா்மோா், தண்ணீா், குளிா்பானம், அன்னதானம் என வழங்கினா். கோயிலின் நான்கு மாடவீதிகள் வழியாகச்சென்று மீண்டும் தோ்நிலையில் நிறுத்தப்பட்டது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், பணியாளா்கள், பட்டாச்சாரியாா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.