நடவாவி கிணற்றில் இறங்கி அருள் பாலிக்கும் வரதர்!

வாவி என்றால் கிணறு என்று பொருள். நட என்றால் நடந்து வருதல் என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறு.
நடவாவி கிணற்றில் இறங்கி அருள் பாலிக்கும் வரதர்!


வாவி என்றால் கிணறு என்று பொருள். நட என்றால் நடந்து வருதல் என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறு. தரைத்தளத்திலிருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதற்குள் மண்டபம். மண்டபத்துக்குள் கிணறு. 
இதுதான் நடவாவி கிணறு என்று அழைக்கப்படுகிறது. சித்ரா பெளர்ணமிக்கு இருதினங்களுக்கு முன்பே, மண்டபத்தில் நீர் தேங்காத அளவிற்கு கிணற்றிலிருக்கும் நீரை வெளியேற்றுகிறார்கள்.
வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் வரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். ஒவ்வொரு வருடமும் சித்ரா பெளர்ணமி அன்று அந்த வைபவம் நடவாவி உற்சவமாகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர், கிணற்றை மூன்றுமுறை சுற்றுகிறார். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறுகிறது. இதுபோல் மொத்தம் 12 முறை தீபாராதனை நடைபெறுகிறது. கல்கண்டு, பழங்கள், என மொத்தம் 12 வகையான பிரசாதங்களைப் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். சித்திரை பெளர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம். நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்கு,  பாலாற்றில் வைத்து பூஜை செய்கிறார்கள். 
ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம் ) எடுத்து, அதற்கு பந்தல் போட்டு அபிஷேகம் நடக்கிறது. இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைகிறார் வரதர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐயங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார். 
அங்கிருந்து பாலாறு, மீண்டும் செவிலிமேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறமாக விளக்கடிக்கோயில் தெரு, காந்தி ரோடு வழியாக வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு பெருமாளை அழைத்து வருகிறார்கள்.
வேடர் பெருமாள்
ராமாநுஜர் மீது பொறாமை கொண்ட அவரது குரு யாதவப்பிரகாசர், அவரை  கங்கையில் தள்ளிவிட வஞ்சகமாக அழைத்துச் சென்றார். இதை, தனது சித்தி மகன் கோவிந்தர் (எம்பார்) மூலமாக அறிந்த ராமாநுஜர், பாதியிலேயே திரும்பிவிட்டார். 
வழி தெரியாத அவர் காட்டுவழியில் கலங்கி நின்றபோது, வரதராஜரும், தாயாரும் வேடர் வடிவில் சென்று குடிக்க தண்ணீர் கேட்டனர். 
ராமாநுஜர் அருகிலுள்ள சாலக்கிணற்றில் நீர் எடுத்து அவர்களுக்கு கொடுத்தார். அதைப் பருகியவர்கள் மறைந்து விட்டனர். சுவாமியே வேடனாக வந்ததை ராமாநுஜர் அறிந்தார். இதன் அடிப்படையில் சுவாமி நீர் பருகிய கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காலை 6 மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. மார்கழியில் சொர்க்கவாசல் விழா முடிந்த 12-ஆம் நாளில் சுவாமி, தாயார், ராமாநுஜர் மூவரும் இந்த கிணற்றிற்கு எழுந்தருளுவர். 
இவ்வேளையில் சுவாமியின் பரிவட்டமும், மாலையும் ராமாநுஜருக்கு அணிவிக்கப்படும். சுவாமிகளுக்கு வேடர் அலங்காரம் செய்யப்படும். பின், ராமாநுஜர் சுவாமிக்கு தீர்த்தம் கொடுக்கும் வைபவம் நடக்கும். இதன்பின்பு சுவாமியும் தாயாரும், கிழக்கு கோபுரம் அருகிலுள்ள ராமாநுஜர் வாழ்ந்த வீட்டுக்கு (திருமாளிகை) எழுந்தருளுவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com