தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனம் முக்கிய முடிவுகள் எடுக்கத் தடை

காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனம் முக்கிய முடிவுகளை எடுக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனம் முக்கிய முடிவுகளை எடுக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் மற்றும் பட்டு நூல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கே.மணிகண்டன் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த பட்டு வளர்ப்புத் துறையின் உதவி இயக்குனர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 
இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி சம்மேளனத்துக்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் 6-ஆம் தேதி வெளியிட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் மற்றும் பட்டுநூல் தொழில் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரான நானும், ஆர்.டி.சேகர், எம்.எஸ்.ஜெயபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தோம். இயக்குநர்களின் கையெழுத்து இல்லை எனக்கூறி எங்களது மனு நிராகரிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டேன். எனது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் அதிகாரி, ஆர்.டி.சேகரை தலைவராகவும், எம்.எஸ்.ஜெயபாலை துணைத் தலைவராகவும் அறிவித்து விட்டார். 
இந்தத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களில் 17 பேர் புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தும், தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விதிகளுக்கு முரணாக நடந்த இந்த தேர்தலுக்கான அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், தலைவர் மற்றும் துணைத் தலைவர், இயக்குநர்கள் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.  
இந்த மனு, அண்மையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தத் தேர்தலில் சம்மேளனத்தின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் ஜூன் 10-ஆம் தேதி வரை எந்த முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து  நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com