ராஜீவ் காந்தியின் 28-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்  செவ்வாய்க்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீபெரும்புதூரில்  உள்ள ராஜீவ் காந்தி  நினைவிடத்தில்  மலர் வளையம்  வைத்து  மரியாதை  செலுத்திய தமிழக  காங்கிரஸ்  தலைவர்  கே.எஸ்.அழகிரி.  
ஸ்ரீபெரும்புதூரில்  உள்ள ராஜீவ் காந்தி  நினைவிடத்தில்  மலர் வளையம்  வைத்து  மரியாதை  செலுத்திய தமிழக  காங்கிரஸ்  தலைவர்  கே.எஸ்.அழகிரி.  


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்  செவ்வாய்க்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி,  முன்னாள் மத்திய அமைச்சர் கே. எச். முனியப்பா, முன்னாள் மக்களவை உறுப்பினர் விசுவநாதன்,  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.யசோதா, ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினர் முருகானந்தம்,  மாவட்டத் தலைவர் ரூபி மனோகரன், நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் உள்ளிட்டோர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.
தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  முன்னதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்,  தொழிற் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ராஜீவ் நினைவு ஜோதியை நினைவிடத்தில் வைத்தனர்.
பின்னர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது: 
வன்முறை  எதற்கும் தீர்வாகாது என்பது எங்களின் வலுவான நம்பிக்கை.  உலகத்தில்  வன்முறை மூலமாக  யாரும் எதையும் சாதித்தது கிடையாது. வன்முறை உயிர்களைப் பலி வாங்கும், வாழ்வைச் சீர்குலைக்கும். பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காணும். இக்கொள்கையை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். 
கருத்துக் கணிப்பு முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கோடிக் கணக்கான வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு சிலரின் கருத்துகளை மட்டும் வைத்து தேர்தல் முடிவுகளை கணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
காவலர்களுக்கு அஞ்சலி...
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவருடன் உயிர் நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அங்குள்ள கல்வெட்டில்  உயிரிழந்த காவலர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அஞ்சலி நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி ராஜேஷ் கண்ணன், காவல் ஆய்வாளர்கள் விநாயகம் (ஸ்ரீபெரும்புதூர்), நடராஜ் (ஒரகடம்),    ராஜேந்திரன் (சுங்குவார்சத்திரம்) உள்ளிட்ட போலீஸார் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 முன்னதாக, காவலர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.
காஞ்சிபுரத்தில்... 
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளையொட்டி அரசு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் தலைமையில் அரசு அலுவலர்கள் பலர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். 
இதில், கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்போம்; அஹிம்சை, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றில் தளராத நம்பிக்கையுடைய  குடிமக்களாக நாம் உள்ளோம். எந்த வகையான கொடுஞ்செயல்கள், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 
அமைதி ஊர்வலம்...
ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் காஞ்சிபுரத்தில்  செவ்வாய்க்கிழமை அமைதி ஊர்வலம் நடத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற அமைதி ஊர்வலத்துக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜீ.வி.மதியழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார்.
இதில், திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு காமராசர் சாலை, மூங்கில் மண்டபம், காந்தி சாலை வழியாக தேரடி வரை  அமைதி ஊர்வலம் நடத்தினர். அப்போது, கொடுஞ்செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராஜீவ் காந்தி உருவம் பதித்த பதாகைகளை  ஏந்திச் சென்றனர்.
செங்கல்பட்டில்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி செங்கல்பட்டு நகர காங்கிரஸ் சார்பில் தீவிரவாதத்துக்கு எதிரான அமைதிப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி செங்கல்பட்டு நகர காங்கிரஸார் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
தொடர்ந்து,  நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், அமைதிப்பேரணி தொடங்கியது. இந்த பேரணி, ஜிஎஸ்டி சாலை வழியாக மணிக்கூண்டு,  புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று ராட்டினங்கிணறு ராஜீவ் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு தீவிரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். 
அக்கட்சியின் நகரத் தலைவர் ஜே.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் டி.ஜெயராமன், ரியாஸ்பாய், முருகன், மேலமையூர் சங்கர், உமாபதி பவளவண்ணன், நூர்பாய், வேலாயுதம், ஆர்.குமரவேல்  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  
 இதில், சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்சி, எஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை,  மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் புத்தன், சி.ஆர்.பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  
 அதேபோல், மறைமலை நகர் நகரத் தலைவர் தனசேகர், திருக்கழுகுன்றம் வட்டாரத் தலைவர் அன்பு உள்ளிட்டோர் தலைமையில் மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினர்  கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். பெண்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
கல்பாக்கத்தில்...
செங்கல்பட்டை அடுத்த கல்பாக்கத்தில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கல்பாக்கம் பேருந்து நிலையம்அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணித்து அஞ்சலி செலுத்தினர். 
இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.பெருமாள் தலைமையில், முன்னாள் வாயலூர் ஊராட்சி மன்றத் தலைவர் அப்துல் உசேன் (எ) கிங் உசேன், மோகன், ராஜ், கருணா மூர்த்தி, நிஜாம் முனார், சபாபதி, கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபின் தீவிரவாதத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com