வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தங்க சப்பரம், சிம்ம வாகனம், சூரியப் பிரபை ஆகிய வாகனங்களில் பெருமாள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். 
தொடர்ந்து, கோயில் உள் பிரகாரத்தில் உள்ள ஆழ்வார் சந்நிதியில் பாசுரங்கள் பாடப்பட்டன. அதன் பின், வெளிப்பிரகாரம் வழியாக பெருமாள் கோயில் வளாகத்துக்கு வந்தார். பலிபீடம், மேற்கு கோபுரம் வழியாக திருக்குடையின் கீழ் கருட வாகனத்தில் வரதரின் பவனி தொடங்கியது. அப்போது, பட்டாச்சாரியார்கள்  வேத மந்திரம் ஓத, அதிர்வேட்டு முழங்க கோயில் யானை முன்செல்ல, கருட வாகனத்தில் வரதர் கோயில் சந்நிதித் தெரு, மண்டபங்கள் வழியாக சின்ன காஞ்சிபுரம் சாலை, ரங்கசாமி குளம், விளக்கொளிக் கோயில் தெரு, கீரைமண்டபம், மேட்டுத் தெரு, கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோயில் தெரு, தாயார் குளம், பிள்ளையார் பாளையம், கிருஷ்ணன் தெரு,  புத்தேரித் தெரு, கச்சபேஸ்வரர் கோயில், சங்கர மடம், செங்கழுநீரோடை வீதி, பூக்கடைச்சத்திரம், பேருந்து நிலையம், காமராசர் சாலை, மூங்கில் மண்டபம், காந்திசாலை, தேரடி வழியாக வந்து கோயில் பிரகாரத்தை வரதர் வந்தடைந்தார்.
வழிநெடுகிலும் திரண்ட பக்தர்கள்: வரதர் கோயில் மாடவீதிகள் மற்றும் அதையொட்டிய வீதிகளில் நள்ளிரவு முதல் திரளான பக்தர்கள் குவியத் தொடங்கினர். தொடர்ந்து, சின்னகாஞ்சிபுரம், செவிலிமேடு, கம்மாளத் தெரு, ஒலிமுகமது பேட்டை பகுதிகளில் நுழைந்து நகரத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன. 
இதையடுத்து, பக்தர்கள் கூட்டம் வரதர் வீதியுலா செல்லும் பாதையில் இருபுறமும் நின்றவாறு வரதரை தரிசனம் செய்து கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பியும், தேங்காய், பழம், சூடம் காட்டியும் வழிபட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதையடுத்து, அந்தந்த நகர எல்லைப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துடன், வரதர் செல்லும் பாதையின் இருபுறமும் போலீஸார் கூட்ட நெரிசலை சீர்செய்தனர். எஸ்.பி. தலைமையில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, சிவ, விஷ்ணு, பாலுசெட்டிசத்திரம், கிராமிய காவல் நிலைய ஆய்வர்கள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், திருடர்களிடம் இருந்து கவனமாக இருக்குமாறு ஒலிபெருக்கிகள் மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
101 பஜனை கோஷ்டியினர்: வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடானபோது முன்னும், பின்னும் பல்வேறு பகுதிகளிளைச் சேர்ந்த பெருமாள் பக்த கோஷ்டியினர் கீர்த்தனைகள், பஜனைகள் பாடியவாறும், ஆடியவாறும் வந்தனர். பக்தர்களுக்கு ஆன்மிக ஆர்வலர்கள் அன்ன தானம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். கருட சேவையை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com