காஞ்சிபுரம்

அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்

29th Jun 2019 04:19 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன விழாவுக்காக ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 40ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் தரிசன நிகழ்வு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இதையொட்டி, அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே அத்திவரதர் தரிசன காலத்தில் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்ற தெற்கு ரயில்வே நிர்வாகம் அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், ஜூலை 1 முதல் இயக்கப்படும் இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு காஞ்சிபுரத்தை 11.52-க்கும், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தை 11.58-க்கும் சென்றடையும். அங்கிருந்து செங்கல்பட்டுக்கு 12.50-க்கு சென்று சேரும். 
மறு மார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.30-க்கு புறப்பட்டு, 2.15-க்கு காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தையும், 2.20-க்கு காஞ்சிபுரம் ரயில் நிலையத்தையும் அடைந்து, அங்கிருந்து அரக்கோணத்துக்கு 3.15-க்கு வந்து சேரும். 
இந்த ரயில் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். மேலும் சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 3 மணி, இரவு 8.09 மணிக்கு திருமால்பூருக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக காலை 7.25-க்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருமால்பூரில் இருந்து காலை 10.40, மாலை 6.40-க்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை இடையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT