காஞ்சிபுரம்

அனந்தசரஸ் குளத்திலிருந்து வஸந்த மண்டபம் வந்தார் அத்திவரதர்

29th Jun 2019 04:22 AM

ADVERTISEMENT

 

அத்திவரதர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்குக் காட்சியளிக்க அனந்தசரஸ் குளத்திலிருந்து வஸந்தமண்டபத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.  

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர்பெருவிழா ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதரை வெளியே கொண்டு வரும் பணிகள் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்தன. 

நிறைவாக, அத்திவரதர் வீற்றிருக்கும் நான்கு கால் மண்டபத்துக்கு கீழ் உள்ள பகுதியில் நீரை வெளியேற்றும் பணி வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கியது. அப்போது, கோயில் கைங்கர்யர்கள், பட்டாச்சாரியார்கள், மணியக்காரர் உள்ளிட்ட பெருமாளுக்கு சேவையாற்றி வரும் அனைவரும் அருகில் இருந்தனர். 

ADVERTISEMENT

திருக்குள வளாகத்தில் அறநிலையத்துறையினரும், பாதுகாப்புப் பணியில் போலீஸாரும் ஈடுபட்டிருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் குளத்தினுள் வீற்றிருந்த அத்திவரதரின் பொற்பாதம் தெரிந்தது. 2.30 மணிக்கு திருமுகத்தைக் கண்டனர். 

2.45 மணிக்கு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு, 3.10-க்கு குளத்தில் அமைக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தின் வழியாகச் சென்று வஸந்தமண்டபத்தை அடைந்தார். அப்போது, அத்திவரதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. 

இதையடுத்து, தைலக் காப்பு உள்ளிட்ட ஆஸ்தான சடங்குகள், பூஜைகள் நடத்தப்பட்டன. ஜூலை 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார் ஆதி அத்திவரதர். தற்போது வஸந்த மண்டபத்துக்குச் செல்ல குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து பட்டாச்சாரியார் கிட்டு கூறியது: 

அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தின் கீழ் அத்திவரதர் வீற்றிருந்தார். அவர் வீற்றிருக்கும் கருங்கல்லால் ஆன தொட்டிக்குள் இறங்கியபோது, சேறு, சகதியினால் ஏற்படும் வாடையின்றி, அவர் இருக்கும் இடத்தில் தெய்வீக மணம் வீசியது. 

இந்த அனுபவத்தால் பெருமாளின் தெய்வீக சக்தியை உணர்ந்தோம். அத்திவரதரை வெளியே கொண்டு வர சுமார் இரண்டரை மணி நேரம் ஆனது. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதரை வெளியே எடுக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து, 6 படிகளைக் கடந்து சுவாமியின் பொற்பாதம், திருமுகம் கண்டு 2.30 மணியளவில் அத்திவரதரை வெளியே எடுத்தோம். 
முழுவதுமாக 2.45 மணிக்கு வெளியே வந்தார்.  

அந்த நேரத்தில் கோயில் கைங்கர்யர்கள், பட்டாச்சாரியார்கள், மணியக்காரர், மடப்பள்ளி, திருப்பாத ஊழியர்கள், அறநிலையத்துறையினர் உள்ளிட்டோர் மட்டுமே உடனிருந்தனர். வேறு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. பாதுகாப்புப் பணியில் போலீஸார் இருந்தனர். 

இதுவரை எத்தனையோ சம்ப்ரோஷணங்கள், பிரம்மோற்சவங்கள், சிறப்புப் பூஜைகள் நடத்தியுள்ளோம். பெருமாள் கோயிலில் 24 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறேன். 

கடந்த முறை அத்திவரதரை வெளிக்கொணரும் பணியில் எனது தந்தை முரளி பட்டர் மற்றும் ராஜம்  பட்டரும் ஈடுபட்டிருந்தனர். தற்போது, அவர்கள் இருவருக்கும் வயது 70 க்கு மேல் ஆகிவிட்டது.  

அவர்களின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும்தான் தற்போது அத்திவரதரை வெளிக்கொணரும் பணிகள் நடைபெற்றன. அத்திவரதர் வெள்ளிப் பேழையில் வீற்றிருப்பதாக பலரும் கருதுகின்றனர். இது தவறான தகவல். சுவாமி எப்போதும் நீரில்தான் உள்ளார். சுமார் 12 அடி ஆழமுள்ள கருங்கல்லால் ஆன தொட்டியில்தான் வீற்றிருக்கிறார். அத்திமரத்தாலான அத்திவரதரை தற்போது வெளியே கொண்டு வந்துள்ளோம். 

40 ஆண்டுகள் நீருக்குள்ளே இருந்ததால் அவரின் திருமேனி ஈரப்பதம் மறைய வேண்டும். இதற்காக, அவரின் திருமேனிக்கு தைலக் காப்பு சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 48 மணி நேரத்துக்குப் பிறகே,  சுவாமிக்கு பூஜை, ஆராதனை உள்ளிட்ட ஆஸ்தான சடங்குகள் நிறைவு பெறும். தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு தரிசனம் தர உள்ளார். 
குறிப்பாக, கிருஷ்ணரின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் வரும் நாளான ஜூலை 1-ஆம் தேதி விசேஷமான நாள் என்பதால் அன்றுமுதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார் என்றார். 

அத்திவரதருக்காக தயாராகியுள்ள வஸந்த மண்டபம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT