நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்க புதிய சுத்திகரிப்பு நிலையம்: இன்று முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. தினமும் 15 கோடி லிட்டர்
மாமல்லபுரம் -நெம்மேலி பகுதியில் அமையவிருக்கும் 2-ஆவது  கடல் நீரைக்  குடிநீராக்கும்  திட்டத்துக்கான பணிகள் நடைபெறும் இடத்தை புதன்கிழமை ஆய்வு செய்த ஊரகத் தொழில் துறை  அமைச்சர் பா.பென்ஜமின். 
மாமல்லபுரம் -நெம்மேலி பகுதியில் அமையவிருக்கும் 2-ஆவது  கடல் நீரைக்  குடிநீராக்கும்  திட்டத்துக்கான பணிகள் நடைபெறும் இடத்தை புதன்கிழமை ஆய்வு செய்த ஊரகத் தொழில் துறை  அமைச்சர் பா.பென்ஜமின். 


சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. தினமும் 15 கோடி லிட்டர் குடிநீரைச் சுத்திகரிக்கப்படும் இந்த நிலையத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியைப் போக்கும் வகையில் கடந்த  2003-2004- ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி என இரண்டு இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் (100 மில்லியன் லிட்டர்) கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 
 இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்தக் குடிநீர்த் தேவையில் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்தன. 
 கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியாக இல்லாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. 
தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர்:  எனவே, சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் போக்கும் வகையில், நெம்மேலியில் மேலும் ஒரு  கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
 இதன் கொள்திறன் 15 கோடி லிட்டர் (150 மில்லியன் லிட்டர்) ஆகும்.  இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1,689 கோடி ஆகும். 
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கம், பருவமழை சரியாக பெய்யாதது போன்ற காரணங்களால்  மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி கடுமையாக உள்ளது.
  இதைத் தொடர்ந்து நெம்மேலியில் ஏற்கெனவே உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் காலி நிலத்தில், மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்  அமைக்கப்படவுள்ளது.  
இந்தச் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஜூன் 27-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.  இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் இந்தச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். 
இதன் மூலம் சென்னை மக்களுக்கு தினமும் 15 கோடி லிட்டர் குடிநீரை கூடுதலாக வழங்க முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com